0
இதுவரை தமிழில் எழுதுபவர்கள் கூகிள் சொல் பரிந்துரை வழியாகவோ, நேரடியாக வாசித்தோ எழுத்துப் பிழைகளைத் திருத்திவந்தனர். தனிச் சொற்களுக்குச் சில பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைத்தாலும் முழுமையான ஒரு ஸ்பெல் செக்கர் இதுவரை இல்லை. இந்நிலையில் தமிழில் புதிதாக இணையத்தில் வாணி என்ற ஒரு எழுத்துப் பிழை திருத்தி வெளிவந்துள்ளது. இது 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சொற்களைப் புரிந்து கொள்வதால் தற்கால வழக்கு நடையில் உள்ள தமிழ் படைப்புகளைத் திருத்திக் கொள்ள முடியும்.

http://vaani.neechalkaran.com/

தமிழ்ச் சொற்களைப் புரிந்து சந்திப்பிழை, புணர்ச்சிப்பிழை, தட்டச்சுப்பிழை, வழக்குமொழி, மயங்கொலிப் பிழை போன்றவற்றைச் சுட்டிக்காட்டும். ஒத்த பரிந்துரைகளையும் கொடுப்பதால் எளிதில் திருத்திக் கொள்ளலாம். மேலும் சுயதிருத்தம் என்ற வசதியுள்ளதால் கருவியே தானாகவும் பிழைகளைத் திருத்தி உதவும்.
பயன்படுத்தும் முறை
தமிழ் கட்டுரையைக் கொடுத்து "திருத்துக" என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஆராயப்பட்டு சொற்கள் கட்டிக்காட்டப்படும். ஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.


அடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள். 


சிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்


பச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்டச் சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.
அத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். "மாற்று" என்பது ஒருசொல்லை மாற்றும் (Replace), "மாற்று(எ)" என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும் (ReplaceAll). மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.


இத்திருத்தி பீட்டா வடிவம் என்பதால் சில முக்கியச் சொற்கள் இல்லாமல் இருக்கலாம்.  இருந்தாலும் பெரும்பான்மையான சொற்களைத் திருத்திவிடும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் திருத்தியாகையால் பலருக்குப் பயன்படும். தொழிற்நுட்ப உதவியுடன் தமிழில் பிழையின்றி எழுதுவோம்.


கருத்துரையிடுக Disqus

 
Top