0

MxmkXLI.jpg

நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை நிறைவேற்றுவதில் பல தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் பல திட்டங்களை வடிவமைத்து செயல்பட உள்ளன. இந்த வழியில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.  IT + IT = IT ( இந்தியர்களின் திறமை + தகவல் தொழில் நுட்பம் + நாளைய இந்தியா (“Indian Talent” plus “Information Technology” equals ” India Tomorrow”) என்ற இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் நிச்சயம் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பொதுத் துறை நிறுவனமான தூரதர்ஷன் மற்றும் இந்திய அரசு ஆகிய இரண்டும் பயன்படுத்தும் அலைக் கற்றை அலை வரிசையில், முழுமையான திறன் பயன்படுத்தப்படவில்லை. இவை பயன்படுத்தும் அலைவரிசையினை “ஒயிட் ஸ்பேஸ்” என அழைக்கின்றனர். மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்தி, தொலை தூரக் கிராமப்புறங்களில், இறுதி வீடு வரை இணைய இணைப்பினை வழங்கலாம் என்று திட்டம் தந்துள்ளது. 

வழக்கமான வை பி அலைவரிசை 100 மீட்டர் தொலைவிற்கே இயங்க முடியும். ஆனால், அரசு மற்றும் தூரதர்ஷன் தன் ஒளிபரப்பிற்காகப் பயன்படுத்தும் 200 - 300 Mhz ஸ்பெக்ட்ரம் ஒயிட்ஸ்பேஸ் அலைவரிசை, 10 கி.மீ தூரம் வரைச் சிறப்பாகச் செயல்படும். இதில் உள்ள பயன்படுத்தாத அலைவரிசைத் திறனை மைக்ரோசாப்ட் பயன்படுத்த திட்டமிடுகிறது. இதனைப் பயன்படுத்துவதை, தகவல் தொழில் நுட்பவியலில் ”White Space” தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி தரப்படும் இணைய வேகத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகம் 16Mbps இருக்கும். இது தற்போது சராசரியாக, அதிக பட்சமாகத் தரப்படும் 2 Mbps வேகத்தைக் காட்டிலும் எட்டு மடங்கு கூடுதல் ஆகும். இத்தகைய ஒயிட் ஸ்பேஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வை பி இணைப்பு தரும் பழக்கம், அமெரிக்காவில் சோதிக்கப்பட்டு, தற்போது வெற்றி கரமாக சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 
இந்தியாவைப் பொறுத்த வரை 20 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது பெரிய தொகையாகத் தெரிந்தாலும், இந்திய ஜனத்தொகை எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது மிகவும் குறைவுதான். எனவே தான், பிரதமர் அவர்களும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் அனைவருக்கும் இணையம் என்ற இலக்கினை அடையப் பாடுபடுகின்றனர். ”எல்லை இறுதி கிராமம் வரை இணையம் தரப்பட வேண்டும்; அப்போதுதான் இந்தியா முழுமையான டிஜிட்டல் இந்தியாவாக மாறும்” என்ற கனவு இந்த ஒயிட் ஸ்பேஸ் தொழில் நுட்ப இணைப்பு மூலம் சாத்தியமாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top