பேருந்து நடத்துனர் என்பவர் எப்படி இருப்பார்..?
நம்மை பொறுத்தவரை ஒரு உருவம் உண்டு.
எச்சிலை தொட்டு டிக்கெட் கிழித்து கொண்டு, சதா சர்வகாலமும் யாரையாவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாற்றிக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
அதில் ஒருவர் தான் கனக சுப்ரமணி.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போது தான் ஆரம்பிக்கிறது.. அப்படி என்னதான் செய்கிறார்...?
கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....
பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்த நாளோ, திருமண நாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ நாளும் இல்லை என்றால், பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார்.
அதாவது இவர் பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.
ஒரு இசை ஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.
இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைப்போல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடத்துனர்கள் என்றாலே எரிந்து விழுபவர்கள், பழகத் தெரியாதவர்கள், பண்பில்லாதவர்கள் என்ற எனது தவறான எண்ணத்தை சுக்குநூறாக்கியவர். இவரின் முயற்சிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
நன்றி: The Hindu..
கருத்துரையிடுக Facebook Disqus