0

தர்மபுரியில் இருந்து 33 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிராமம் மகிழ்ச்சிக் கோலம் பூண்டுள்ளது. காரணம்... பரமேஸ்வரன்

துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை புரியும் சிறுவர்களுக்கு மத்திய அரசின் குழந்தை நல வாரியம் வீரதீர செயல் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. பிரதமர் கையினால் இந்த விருது வழங்கப்படும்போது முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் அனைவரும் கூடியிருப்பார்கள். இந்த விருதினை இந்த வருடம் பெற்ற ஒரே தமிழக சிறுவன்தான் பரமேஸ்வரன்

ஏழை விவசாய தொழிலாளி கோவிந்தன்- லட்சுமி தம்பதியனரின் மூன்றாவது மகனான பரமேஸ்வரன் தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த 2010ம் வருடம் செப்டம்பர் மாதம் 18ம்தேதி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நாகவதி ஆற்றின் கரையில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது ஆற்றுக்குள் குளித்துக்கொண்டு இருந்த சிறுமிகள் சரண்யா, புவனேஸ்வரி, ஆரத்தி ஆகியோர் எதிர்பாராத விதமாக பள்ளமான பகுதியில் சிக்கிக் கொண்டனர். இதன் காரணமாக சிறுமிகள் போட்ட மரண கூச்சலைக் கேட்ட பரமேஸ்வரன், தனக்கு நீச்சல் தெரியாத சூழ்நிலையிலும் சிறுமிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆற்றில் இறங்கி வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றினான்.

தனது உயிரையும் பொருட்படுத்தாது சிறுமிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் பரமேஸ்வரனின் தீரத்தை மெச்சி அப்போதைய போலீஸ் எஸ்.பி., சுதாகர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அத்துடன் பரமேஸ்வரனைப் பற்றி இந்திய குழந்தை நலவாரியத்திற்கும் எழுதினார். அந்த முயற்சியே திருவினையாகியது.

மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டு, இதற்காக டில்லிக்கு வரவழைக்கப்பட்ட பரமேஸ்வரன் தன்னைப்போலவே தேர்வு செய்யப்பட்ட இதர மாநில சிறுவர், சிறுமிகளோடு பத்து நாள் அரசு விருந்தினராக பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

இது பற்றி பரமேஸ்வரன் கூறுகையில் பிரதமர் கையால் விருது பெற்றது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் பத்து நாள் அனுபவம் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. குடியரசு தினத்தன்று தனி காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது யாருக்கும் கிடைக்காத இனிய அனுபவம். நல்ல சட்டை இல்லாத எனக்கு அருமையான கோட்.சூட் பரிசாக கொடுத்தார்கள். இது போல இன்னும் பல பரிசுகள் கிடைத்தது, பாராட்டுகள் குவிந்தது.என் சொந்த கிராமத்தில் இப்போது என்னை எல்லோரும்பாராட்டுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியதே தவிர அப்போது எனக்கு நீச்சல் தெரியாது என்ற விஷயம் எல்லாம் எனக்கு நினைவிற்கு வரவில்லை. நான் எனது கடமையாகத்தான் இதைச் செய்தேன். ஆனால் இவ்வளவு பெரிய மரியாதை இதற்கு கிடைக்கும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. நான் பெரியவனானதும் நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய துறையை தேர்ந்து எடுத்து சிறப்பாக செயல்படுவேன். அதுவே என் லட்சியம் என்று கூறிய பரமேஸ்வரன் குரலில் அதற்கான உறுதி தெரிந்தது.

கருத்துரையிடுக Disqus

 
Top