0
 
'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'ன்னு ரொம்ப காலமா சொல்லிக்கிட்டு வர்றோம் இல்லையா? இது ஏதோ சம்பிரதாயமாச் சொல்ற வார்த்தையில்லே! இது உண்மைதான்னு விஞ்ஞானிகளே இப்ப ஒத்துக்கறாங்க! அமெரிக்கா, இங்கிலாந்து - இங்கேயெல்லாம் இப்ப 'சிரிப்புச் சிகிச்சை' அப்படின்னு ஒரு புது சிகிச்சை முறையையே உருவாக்கிட்டாங்களாம். மனசுலே அழுத்தம் ஏற்படுதில்லே... இந்த மன அழுத்தம் பல நோய்களை உண்டாக்கிப்புடும். அதிகப்படியான ரத்த அழுத்தம், இதய நோய்கள், வயிற்றுப்புண் (பெப்டிக் அல்சர்) மன உளைச்சல், நரம்பு சம்பந்தமான கோளாறுகள்... இப்படி பல சிக்கல்கள் வர்றதுக்கு மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணம். இந்த மன அழுத்தத்தை விரட்டிப்புட்டா அந்த நோய்கள் நம்மை நெருங்காது. சரி, மன அழுத்தத்தை விரட்டறத்துக்கு என்ன வழி ? வாய்விட்டுச் சிரிக்கிறதுதான் சுலபமான வழி! அதுக்காகத்தான் இந்தச் சிரிப்பு சிகிச்சை முறையைக் கொண்டுக்கிட்டு வந்திருக்காங்க. அந்த சிகிச்சை அங்கே எப்படி நடக்குதுங்கறதைச் சொல்றேன். அதைக் கேட்டுட்டு நீங்க சிரிக்க ஆரம்பிச்சுடுவீங்க... ஏன்னா அது கேக்கறத்துக்குக் கொஞ்சம் வேடிக்கையாயிருக்கும்! வாய் விட்டுச் சிரிக்கறத்துக்கு முன்னாடி லேசான சுவாசப்பயிற்சி அவசியமாம். மூச்சையிழுத்து வெளியே விடறப்போ கைகளை மேலே தூக்கணும்... அப்புறம் கீழே இறக்கணும்... இப்படி ஒரு பத்து தடவை சுவாசப்பயிற்சி செஞ்ச பிறகு சிரிப்பு சிகிச்சையை ஆரம்பிக்கணும்.
சிகிச்சை நம்பர் ஒன்று :
 
பலத்த சிரிப்பு. கூட்டமா நின்னுக்க வேண்டியது. யாராவது ஒருத்தர் ஒண்ணு ரெண்டு மூணு சொல்லணும். ஒன்-டூ-த்ரீன்னு சொன்ன உடனே எல்லாரும் கையை உயரே தூக்கிக்கிட்டு... வாயை முழுசாத் திறந்து 'ஹா...' ஹா...!'-ன்னு சிரிக்கணும். இந்த சிரிப்பை இரண்டு நிமிட இடைவெளி விட்டு மறுபடி சிரிக்கலாம்.
சிகிச்சை நம்பர் இரண்டு :
மவுனச்சிரிப்பு. இந்தச் சிரிப்புலே வாய் அகலமாத் திறந்திருக்கணும். சிரிக்கிறவங்க அதிகமா சத்தம் எழுப்பக்கூடாது. அப்படி சிரிச்சிக்கிட்டே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கணும். இது ரொம்ப இயல்பா இருக்கணும். மவுனச் சிரிப்புலே செயற்கைத்தனம் இருக்கப்புடாது.
சிகிச்சை நம்பர் மூன்று :
உதடு மூடிய சிரிப்பு : இந்தச் சிரிப்புச் சிரிக்கறப்போ உதடுகள் மூடியிருக்கணும். சிரிப்பை வெளியிலே காட்டிக்காமே லேசா முணுமுணுக்கலாம். இந்தப் பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. அடி வயிற்றுத்தசைக்கு நல்லது. அதைச் சார்ந்திருக்கிற உறுப்புகளுக்கும் நல்லது.
சிகிச்சை நம்பர் நாலு :
நடுத்தர சிரிப்பு : மனசுக்கு அமைதி தேவையா? அதுக்கு இந்தச் சிரிப்பு ரொம்பப் பொருத்தம். நீங்க அதிகமாவும் சிரிக்கப்புடாது... குறைவாவும் சிரிக்கப்புடாது... இதுவும் கூட்டமா இருந்து சிரிக்க வேண்டிய ஒரு சிரிப்புதான்!
சிகிச்சை நம்பர் ஐந்து :
நடனச் சிரிப்பு : சிரிச்சிக்கிட்டிருக்கறப்பவே நடனம் ஆடறது மாதிரி அப்படியும் இப்படியும் துள்ளிக் குதிச்சி சிரிக்கணும். அதாவது ஒரு குழந்தையின் சிரிப்பு மாதிரி இது இருக்கணும்! அதுக்காக முரட்டுத்தனமா குதிச்சிக் கையை காலை உடைச்சிக்காதீங்க! மென்மையாக் குதிச்சி சிரிச்சாப் போதும்! இதுதான் இப்ப மேல் நாடுகள்லே உள்ள ஐந்து வகையான சிகிச்சை முறைகள்! சரி இந்த சிகிச்சைக்கு நேரம் காலம் உண்டா? உண்டு! காலை 6 மணி முதல் 7 மணி வரை சிரிப்புச் சிகிச்சைக்கு ரொம்பப் பொருத்தமான நேரமாம்! அதிகாலையிலேயே சிரிப்பை ஆரம்பிச்சுட்டா அன்றைக்குப் பூராவும் நம்மகிட்டே ஒருவிதமான சுறுசுறுப்பு ஒட்டிக்கிட்டே இருக்குமாம்! அனுபவிச்சிப் பார்த்தவங்க சொல்றாங்க!

கருத்துரையிடுக Disqus

 
Top