0
கல் மண் சுண்ணாம்பு
கலந்து கட்டிய வீடெனினும்
என்னுள்ளே உயிராக
கலந்துவிட்ட வீடு என் வீடு

.மொத்தமாய்ச் சதுரஅடி
முப்பதுக்கு முப்பதெனினும் என்
மூச்செல்லாம் தனக்குள்ளே
மொத்தமாய் வைத்திருக்கும் வீடு என் வீடு

பளிங்குத் தரைகளில்லை
தளமான கூரையில்லை
ஓட்டுவீடுதான் எனினும்
என் உணர்வோடு கலந்த வீடு என் வீடு

சுவரோடு முகம் வைத்து நான்
சுண்ணாம்பைச் சுவைத்த வீடு
தரையோடு தலை வைத்தும்
நிறைவாக வாழ்ந்த வீடு என் வீடு

பூசையறையென்ற ஒன்றுண்டு
புழங்குமறையும் அதுவேதான்
புத்தகங்கள் போட்டு வைக்க
பெட்டியொன்று அங்கிருக்கும்
அறுபது ரூபாயில்
அப்பா வாங்கிய மேசையிருக்கும்
படுக்கையறை ஒன்றிருக்கும்
பழங்காலக் கட்டிலிருக்கும்
பாயும் தலையணையும்
பக்கத்தில்தானிருக்கும்
ஆம அத்தனையும்
ஒரே இடத்தில் அடக்கிய வீடு என் வீடு

இரவெல்லாம் பகலெல்லாம்
என்னோடு கலந்த வீட்டை
இருபத்தாறு வயதினிலே
எப்படியோ பிரிந்து வந்தேன்

இன்று எத்துனைதான் வசதிகள் வந்தும்
ஏனோ வரவில்லை
என் வீட்டின் சுகங்கள் இன்னும்
எப்போதாவது தேடிச்சென்றால்
ஏக்கமாய்ச் சிரிக்கும்
இப்போ
எனக்கு பாத்யமில்லா என்வீடு

கருத்துரையிடுக Disqus

 
Top