0
நூறாண்டுகள் வாழ்வது என்பது அதிசயம். அதுவும் ஆரோக்கியமாக அதுவரை வா ழ்வது புதுமை. கட்டுக் கோப்பான உடலுக்காக, பல்வேறு பளுதூக்கும் பயிற்சிகள் செய்து, தசைகளை முறுக்கி வலுவாக இருப்பது "பாடிபில்டர்' என்ற பயிற்சி. இதில் பலர் ஆணழகன் போட்டியில் ஈடுபடுவது வழக்கம்.

முன்பு 1952ல் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தவர் மனோகர் அய்ச், 101. ஐந்தடி உயரத்திற்கு ஒரு அங்குலம் குறைவு.முன்பு மேற்கு வங்கமும், வங்கதேசத்தில் ஒருபகுதியும் இணைந்த "ஐக்கிய வங்காளம்' என்றழைக்கப்பட்ட மாநிலத்தில் கோமிலா என்பது இவர் பிறந்த ஊர். இப்போது கோல்கட்டாவில் வசிக்கிறார். தன் பன்னிரண்டாம் வயதில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். மல்யுத்தப் பயிற்சியும் பெற்றார். ஆனால், இளம் வயதில் கடும் காய்ச்சல் ஏற்பட்டதும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டபின், முயற்சி தளராமல் விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டார். அதற்குப்பின் பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் குழுவில் சேர்ந்து, சாகசக் காட்சிகளை நிகழ்த்தினார். பல்லால் இரும்புக் கம்பியை வளைப்பது, கழுத்து அழுத்தத்தில் நீளமான ஈட்டியை வளைப்பது போன்ற சாகசங்களைச் செய்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் 1942ல், அன்றைய பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த விமானப்படைக்கு "ராயல் ஏர்போர்ஸ்' என்று பெயர். அதில் சேர்ந்தபின் அவர் "பாடிபில்டிங் பயிற்சிக்கு' அதிக அக்கறை காட்டினார். ஆனாலும், அங்கும் அவர் நீடிக்கவில்லை. பிரிட்டிஷ் அதிகாரியை கோபத்தில் அறைந்த காரணத்தால், சிறைவாசம் ஏற்க நேரிட்டது. சிறையில் தன் பயிற்சிகளை அவர் கைவிட வில்லை. அவர் பயிற்சி ஆர்வங்களைக் கண்ட சிறை அதிகாரிகள் அவருக்கு விசேஷ உணவு தர அனுமதித்து, பயிற்சி செய்ய ஊக்குவித்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றதும் மனோகர் அய்ச் விடுதலை பெற்றார்.அதற்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தார். அதன் சிகரமாக, 1952ல் உலக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றார்.

இவ்வளவு வெற்றிபெற்ற போதும், அவர் தொடர்ந்து ஏழையாகவே இருந்தார். காரணம் அவர் மேற்கொண்ட சாதனைப் பயிற்சிகள் பணம் தரும் விளையாட்டுப் பட்டியலில் கிடையாது. அதனால் தானோ என்னவோ, தன் மகன்கள் இருவரையும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தவில்லை.இன்று கூட வயோதிகமான காலத்தில், ஆடிப்போன தசைகளை முறுக்கி அவர் போஸ் கொடுத்து பரபரப்பாக்குகிறார். அவரது உணர்வில் தொய்வு சிறிதும் இல்லை.இதற்கு முக்கிய காரணங்களில் அவரது உணவுக் கட்டுப்பாடும் உதவுகிறது. பருப்புவகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவை இவர் உணவில் இடம் பெறுகிறது, நன்னீர் மீன் மட்டும் இவர் விரும்பிச் சாப்பிடுகிறார். புகைபிடிப்பதும் இல்லை. மதுவைத் தொட்டதில்லை. பரபரப்பாகி பதற்றப்படுவதும் இல்லைகடந்த 16ம் தேதி இவர் நூற்றாண்டு விழா கோல்கட்டாவில், நடந்தபோது பேரன்கள்,கொள்ளுப்பேரன்கள் சகிதமாக போஸ் கொடுத்த விதம் அலாதியாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

-நன்றி தினமலர்

கருத்துரையிடுக Disqus

 
Top