0
கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல் கோரும் மனுக்களை பெறும் வகையில், வருவாய் நிலை ஆணைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பட்டா மாற்றம் பெறுவதில் மக்களுக்கு உள்ள இடர்பாடுகளைக் களைய, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும், ஒவ்வொரு திங்கள்கிழமையும், முழு நேரமாக அலுவலகத்தில் இருந்து பட்டா மாற்றம் குறித்த மனுக்களைப் பெறுவார்கள்.

கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருந்தால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், முழு நேரமும் மேற்படி மனுக்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களால் பெறப்படும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில், வருவாய் கணக்குகளில் தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.

மாநிலம் முழுக்க வெள்ளிக்கிழமை தோறும், வட்டாட்சியர் அலுவலகங்களில், பட்டா மாற்றம் செய்யும் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, பட்டா மாற்ற மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

இந்தப் புதிய திட்டத்தின் முக்கிய அம்சம், கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர், குறுவட்ட நில அளவர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களின் மீது அறிக்கை சமர்ப்பிக்க காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் இந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, கவனமாக கண்காணிக்கப்படும்.

உட்பிரிவு செய்ய அவசியம் இல்லாத இனங்களில் 15 நாள்களுக்கு உள்ளாகவும், உட்பிரிவு செய்ய வேண்டிய இனங்களில் 30 நாள்களுக்கு உள்ளாகவும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை வட்டாட்சியர் உறுதி செய்ய வேண்டும்.

பட்டா மாற்றம் செய்ய, தேவையில்லாமல் மண்டல துணை வட்டாட்சியர், நில அளவர்கள் மற்றும் பிறருக்காக வட்டாட்சியர் அலுவலகங்கள் சென்று விவசாயிகள் மனுக்கள் கொடுக்க காத்திருப்பதைத் தவிர்த்து, தமது கிராமங்களிலேயே மனுக்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தால் போதுமானது.

கருத்துரையிடுக Disqus

 
Top