0

ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள்.

'அஞ்சாம்கிலாஸ்' கூட தாண்டாதவன் கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்.

கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான். புரோகிதர்களும் கல்யாண‌மும்.

படிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளது. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றி வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

எட்டு முழ வேட்டியையும் பதினாறு கஜம் புடவையையும் பெட்டிக்குள் முடக்கியாச்சு. பாரம்பரியம் என்று சொல்லி அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.

ஆனால் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.

ஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம்.

ஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கேச் செல்லாமல் பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கிறார்கள்.

மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும் தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன.

எனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா?

உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது?

மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா?

சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இவற்றைப் பற்றி அலசலாமா?

மணப்பொருத்தம் பார்ப்பவர்கள் முதலில் பார்ப்பது பத்துப் பொருத்தம்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட நாட்களாக வரன் கிடைக்காதவர்களுக்கு பத்துப் பொருத்தமும் பொருந்தி ஒரு வரன் அமைந்து விட்டால் எப்படியாவது இதைமுடித்துவிட வேண்டும் என்று பெரும்பாடு படுகிறார்கள்.

பிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் ஜாதகத்தைத்தான் முதலில் பரிமாறிக் கொள்கிறார்கள். அவரவருக்குத் தெரிந்த புரோகிதரிடம் ஜாதகத்தைக் காட்டுகிறார்கள்.

 புரோகிதர் தனக்குத் தெரிந்த வரையில் ஜாதகத்தைப் பார்த்து எத்தனைப் பொருத்தம் பொருந்துகிறது என்பதையும், திருமணம் செய்யலாமா கூடாதா என்பதையும், பொருத்தத்தில் சிலவற்றை 'அட்ஜஸ்ட்' செய்துகொள்ள என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார்.

புரோகிதர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இது கம்ப்யூட்டர் யுகமாயிற்றே. பிறந்த நேரத்தையும் பிறந்த நாளையும் கொடுத்தால் ஜாதகம் 'ரெடி'.

புரோகிதர் ஜாதகமானாலும், கம்ப்யூட்டர் ஜாதகமானாலும் ஒரு துண்டுச்சீட்டில் பத்து கட்டங்களை வரைந்து நடுவில் ஒர பெரிய கட்டத்தையும் போட்டு சில கட்டங்களில் கேது, சந்திரன், ராகு, சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், சனி என போடுகிறார்கள். சில கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்களைக்கூட சேர்ந்தார்போல போடுவதுண்டு.

நடுவில் உள்ள பெரிய கட்டத்தில் ராசியையும் நட்சத்திரத்தையும் போடுகியார்கள்.சில கட்டங்களை காலியாகவும் விடுகிறார்கள். கேட்டால் ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள் அதற்காகத்தான சில கட்டங்களை காலியாக திறந்து வைத்திருக்கிறார்களோ!.

படிக்காத பாமரானாலும் சரி, பி.எச்.டி பட்டம் வாங்கிய முனைவரானாலும் சரி, இந்த துண்டுச்சீட்டுதான் இவர்களின் வாழ்கையை தீர்மானிக்கும் 'அத்தாரிட்டி'.

இந்த துண்டுச்சீட்டை படிக்கவோ, படித்துவிட்டு விளக்கம் சொல்லவோ அண்ணா பல்கலைக்கழகத்திலோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலோ பயின்றவனால் கூட முடியாது. விளங்காது. அவ்வளவுதான்.

வான் வெளியில் அதிநவீன ராக்கெட்டுகள் விட்டபிறகும்கூட கிரகங்களைக் கணிப்பதில் விஞ்ஞானிகள் திண்டாடுகிறார்கள் ஆனால் கையளவு கட்டத்தில் நம்ம ஊர் புரோகிதன் அதான் 'அஞ்சாம்கிலாஸ்' கூட தாண்டாதவன் கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்.

அப்ப யாருக்கு விளங்கும்?. பார்ப்பன குடும்பங்களில் சிறு வயதுமுதலே பள்ளிப்படிப்பு மண்டையில் ஏறாத சில மரமண்டைகளை "இவனுக்கு சுட்டுப்போட்டாலும் படிப்பு வராது, இவன் படித்தவிட்டு இஞ்சினிராகவோ, டாக்டராகவோ, ஏன் ஒரு குமாஸ்தாவாகவோக்கூட வரமுடியாது. இவனுக்கு ஏத்தது புரோகிதம்தான்” என முடிவு செய்து அவனை இத்தொழிலுக்கு இறக்கிவிடுகிறார்கள். நாம் என்ன செய்கிறோம்? ஆடு மாடு மேய்க்க அனுப்புகிறோம். அவர்கள் புரோகிதம் பார்க்க அனுப்புகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த 'அதி உயர்ந்த' தொழிலில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு வாய்ப்பு கிடையாது. இங்கும் ஆண் ஆதிக்கம்தான். படிப்பு வராத பார்ப்பனப் பெண்கள் முருக்கு சீடைதான் சுட வேணடும்.

இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள்தான் கிரகங்களின் நடமாட்டத்தைக் கணித்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள்.

இந்த அதிபுத்திசாலிகளுக்கு சில இடங்களில் ஏக கிராக்கி ஆகிவிடுகிறது. இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலிலும் புரோகிதர்களுக்கு ஏக கிராக்கியாம். புரோகிதர் பற்றாக்குறை ஏற்படுகின்ற இடங்களில் பார்ப்பனரல்லாத பிற சாதிகளிலிலும் இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள் 'சைடுபிசினஸ்ஸாக' இத்தொழிலில் இறங்கி உள்ளார்கள்.

திருமணத்திற்கான பத்துப் பொருத்தங்கள்:

நமது முன்னோர்கள் திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்துள்ளனர். நாளடைவில், அவற்றில் முக்கிய பொருத்தங்களாக 10 மட்டும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை:

1. தினப்பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம்
2. கணப்பொருத்தம்.
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப்பொருத்தம்
6. ராசிப்பொருத்தம்
7. ராசி அதிபதிப் பொருத்தம்
8. வசியப் பொருத்தம்.
9. ரஜ்ஜூப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்

இவை ஒரு பஞ்சாங்கத்தில் படித்தது. புரோகிதருக்கு புரோகிதர் இது மாறுபடலாம்.

நமது 'முன்னோர்கள்' திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்தார்களாம்.

நமது முன்னோர்கள்தான் தற்குறிகளாச்சே? அவர்கள் எப்படி நன்கு சிந்தித்து...ஆராய்ந்து வகுத்திருக்க முடியும்? அதுவும் சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்தார்களாம்.

கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடுகூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம். அந்த கதையாயில்ல இருக்கு.

இங்கே முன்னோர்கள் என்பது பார்ப்பனர்களைத் தவிர வேறுயாருமில்லை என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?.

இந்த பொருத்தங்களில் ஆறு பொருந்தினாலே போதுமாம். திருமணத்திற்கு தடை ஏதுமில்லையாம். சரி. ஜாதகத்தை நம்புகிறவர்கள் இந்த பொருத்தங்களை மட்டும்தான் பார்க்கிறார்களா?. வேறு பொருத்தங்களைப் பார்ப்பதில்லையா?

நடைமுறையில் மக்கள் பார்க்கும் பொருத்தங்களே முதன்னையானதாகவும் இறுதியானதாகவும் அமைகின்றன. திருமணம் நடைபெறுவதற்கும், நடைபெறாமல் போவதற்கும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களே பிரதானமாக அமைகின்றன.

நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்கள்:

• பையன் கருப்பா-சிவப்பா? ஆளு நெட்டையா-குட்டையா? ஊத்தப்பல்லா- நல்லப்பல்லா? கூர் மூக்கா-சப்ப மூக்கா? கண் நல்ல கண்ணா-மாறு கண்ணா? நடை, பாவனை, குரல்.....ஆணா இருந்தா ஹாண்ட்ஸம்ப்; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்-குடும்பப் பாங்கான-இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது.

• வசதி-வாய்ப்பு எப்படி? பையன் என்ன வேலை செய்கிறான்? கை நிறைய சம்பளம்-குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா, உட்கார வச்சி சோறு போடுவானா?அதாவது பெண் கஷ்டப்படாம வாழ வேண்டும். சம்பளத்தோடு மேற்படி வருமானம்-கிம்பளம்- எவ்வளவு? அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா? வீடு நில புலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு, ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதிகளைப் பார்க்க வேண்டும். சொத்தைப் பங்கு போட உடன் பிறந்தவர்கள் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இருக்கிறார்களா? மொத்தத்தில் ஒரே பையனா? சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு?. நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே என்பதை உறுதி செய்து கொள்வது. இவைகள் பெண் வீட்டார் பார்க்கும் பொருத்தம். இவற்றை உறுதி செய்து கொணட பிறகே அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.

• பெண் நல்ல சிவப்பா 'கலரா' இருக்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் போல இப்போதைய கனவுக்கன்னி யாரோ? இது பையனின் எதிர்ப்பார்ப்பு. இதற்குமேல், பையனை பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள் எதிர்பார்ப்புகள் தனி. கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான்.

• உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில் அமைந்து விட்டால் அடுத்து பார்ப்பது பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். சொத்து பத்து ஏராளம் என்றால் உருவம்-வடிவம் விசயத்தில் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய பேர் இருக்க வேண்டும் என்று கருதினர். மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள். காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று.

• மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிற அடுத்த பொருத்தம் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா? வீட்டு வேலை தெரியுமா? என்பது. சாதாரண வீட்டுப் பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது....மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.

• வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து கட்டத்தில் கூட அந்தப் பெண் உதவக் கூடாது. வெளி ஊரில் வேலை என்றாலும் வேலையை விடக்கூடாது, மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் விருப்பம் இல்லை என்றாலும் வேலையை விட்டுவிடவும் தயாராக இருக்க வேண்டும்.

• அடுத்து வரதட்சணை. நகை பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா? கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? டூ வீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக் கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மண்டபத்தில் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.

ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது:

• சாதி-குலம் கோத்திரத்தை உறுதி செய்வது.
• சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா?
• பையனுக்கு பீடி சிகரெட்டு, தண்ணி- கிண்ணி, சீட்டு, பொம்பள-கிம்பள இத்தியாதி-இத்தியாதி என ஏதாவது பழக்கம் உண்டா? இது பெண் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.
• பெண் நல்லவளா? 'கற்பு' விசயத்தில் பெண் 'கெட்டுப்' போயிருந்தால் அவள் வாழ்வு அதோ கதிதான். ஆனால் ஆண் இந்த விசயத்தில் கெட்டவனாயிருந்தாலும் அது ஒரு பெரிய விசயமல்ல. ஒரு பெண் ஆண்களுடன் இயல்பாகப் பழகினால் அது குற்றம், பெண்ணோட அப்பன் எப்படி என்பதைவிட பெண்ணோட தாயார் எப்படி?

இது குடும்ப கைளரவத்திற்கு அவசியமாம். இது பையன் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் நம்ம ஒற்றர்களிடம் பயிற்சி எடுத்தால் டெரரிஸ்டுகளைப் பின்னிப் பெடலெடுக்கலாம்.

ஆக மேற்கண்ட பொருத்தங்களே நடைமுறையில் திருமணங்களைத் தீர்மானிக்கின்றன. பிறகெதற்கு ஜாதகப் பொருத்தம்? பார்ப்பனர்கள் பொருக்கித் தின்னத்தான்.

ஜாதகப் பொருத்தங்களும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களும் திருப்தியளிக்கும் பட்சத்தில் திருமணம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்வதும் என்கிற சம்பிரதாய நடவடிக்கை. இதற்கு நாள், நேரம், கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டு தான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டிழந்த பெண்ணோ கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து.

போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா என அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கைமட்டும் நைனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ? செல்லும் போது மூன்று, ஐந்து அல்லது ஏழு பேர் என்கிற ஒற்றைப்படையில்தான் செல்ல வேண்டும். இரட்டைப்படையில் செல்லக்கூடாது. சென்றால் என்னவாகும் என்று யோசிக்கக்கூட யாருக்கும் தைரியம் கிடையாது.

அடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு கை நனைக்கச் செல்வது. இதற்கு குறிப்பாக பிற சாதியினரை ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்திற்கு குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை சொந்த கார் இல்லை என்றால் வாடகைக்காவது வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது! இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.

செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோயிலில் கட்டாயம் தேங்காய் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ-எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR -நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட் போட்டுக் கொள்வார்கள்!

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்லும் போது பெண் வீட்டார் பெண்ணை அலங்காரம் செய்து அனைவர் முன்பும் நிறுத்துவார்கள். இதற்கு தனி அழகுக்கலை நிபுணர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவதும் உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பெண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த அலங்காரமெல்லாம், பையன் வீட்டு படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக.

விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும். சுவரில் தொங்கும் ஒரு காலண்டரைப் பார்த்து தோராயமாக திருமணத்திற்கு ஒரு தேதியையும் தீர்மானித்துக் கொள்வார்கள்.

அடுத்து நிச்சயதார்த்தத்தை நடத்துவது யார்? திருமணத்தை நடத்துவது யார்? என்பது தீர்மானிக்கப்படும். சாதி வழக்கம், ஊர் வழக்கம் என்ற பெயரில் இவை தீர்மானிக்கட்பட்ட காலம் போய் திருமணத்தை பெண்வீட்டார் தலையில் கட்டுவதுதான் இன்றைய வழக்கம். இது ஒரு சம்பிரதாயமாகவும் மாறிவருகிறது.

நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா! நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்படி என்று வாய் பிளக்க வேண்டும்.

அடுத்து ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி திருமண நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR-நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட் போட்டுக் கொண்டு தங்களை சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், முகூர்த்த நாள் பஞ்சாங்கப்படி மாதத்தில் ஒரு சில நாட்கள்தானே. பிறகு எப்படி ஒரே நாளில் பல திருமணங்களை இருக்கின்ற ஒரு சில மண்டபங்களில் நடத்த முடியும்? மண்டபம் மட்டுமல்ல, புரோகிதரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.

முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோயில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.

அடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சணம் என மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப் பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டால் சாதிப் பட்டம்-கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா., கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் அவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.

பத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர்- கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா!

மணப் பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.

சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்த பிரச்சனை அதிகமாக வரும்.

தாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.

பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது-எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்-குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.

பசிக்கு சோறுபோடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவை, ஐயிட்டங்களைத் தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே. அதற்காகத் தான் இவ்வளவும்.

முன்பெல்லாம், சோறு, சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒரு சிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணாக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.

முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; பிரம்மாண்டமான மணமேடை. பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் இதில மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்ன வேண்டும். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ணவிளக்குகளால் பூத்து குலுங்கும். புற்களையும் தழைகளையும் அள்ளி தெளித்து முடிந்தால் வெண்புறாக்களை மேடையில் மேயவிட்டு வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டு கச்சேரி நடத்தி அனைவரையும் பிரமிக்க வைக்கிறார்கள். திருமணத்திற்கு நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மணமேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது.

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.

காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. ஊருக்கு ஊர், சாதிக்கு சாதி இச்சம்பிரதாயங்களும் சடங்குகளும் மாறுபடும்.

மொய்யில்லாமல் கல்யாணமா? மாமன் வைக்கும் மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து-கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமால் திண்டாடுவதும் தனிக்கதை. ஏற்கெனவே எழுதின மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்பத் தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை! இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.

இந்து மதம் சார்ந்த திருமணம் குறித்தே இங்கு கருத்துக்களை முன் வைத்துள்ளேன். இசுலாமிய, கிருத்துவ மதத் திருமணங்களில் சில மாறுபட்டும் சில கூடுதலாகவும் சில குறைவாகவும் அமையக் கூடும்.

மணவீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து வகையான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்து அனைவரையும் மகிழ்வித்துத்தான் பெரும்பாலான திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

திருமணத்திற்குப் பிறகு, தங்களது வாழ்வில் மணமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு திருமணத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்ன பிற நடவடிக்கைகளும் இவர்களுக்கு உதவுகிறதா என்பதே நம்முடைய கேள்வி.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றிணைவதும், இனப்பெருக்கம் செய்வதும் உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). இதற்காக மனித இனம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதான் திருமணம். இந்த ஏற்பாட்டிற்கு எவை அவசியமானதோ அவற்றை மட்டும் செய்தால் போதுமானது. இதற்கு மேலும் செய்யக்கூடியவை பொருள் விரயத்தையும், காலவிரயத்தையும் மட்டுமே விட்டுச்செல்கின்றன. இந்தப் பொருள் விரயமே பின்னால் மிகப் பெரும் சுமையாக அமைந்துவிடுகிறது.

குடும்ப வாழ்க்வைத் தொடங்கிய பிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமானது. உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பெற்று பிள்ளை குட்டிகளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நலமாக வாழ்வதற்குத்தான் "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ" வாழ்த்துகிறார்கள் போலும்.

ஜாதகம் பார்ப்பதும், சடங்குகள் சப்பிரதாயங்களை கடைபிடிப்பதும் முக்கியமாக சுமங்கலி பாக்கியத்துக்காகவே செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தன்றோ அல்லது அதற்கு அடுத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவோ மணமகன் விபத்துக்குளாகியோ அல்லது வேறு காரணங்களாளோ மரணமடைவது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மணமகன் மரணமடைவான் என்பதை முன்கூட்டியே சொல்லாத காரணத்திற்காக, மரணத்தை மறைத்த குற்றத்திற்காக எந்தப் புரோகிதன் மீதும் யாரும் கிரிமினல் வழக்குத் தொடர்வதில்லை.

அடிப்படைத் தேவைகளுக்காக நாம் அன்றாடம் உழைக்கிறோம். கட்டுப்படியாவதில்லை. நம்மை ஆளும் அரசுதான் நமது வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாகும். சரியான அரசு இல்லை என்றால் மக்களின் வாழ்வு அதோ கதிதான் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அரசு தோன்றுவதற்கு முந்தைய ஆதிகால சமூக வாழ்க்கையில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் வாழ்ந்து வந்தான். அரசு பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய சமூகத்தில் அரசுக்கு வெளியே தனித்து யாரும் வாழ்ந்துவிட முடியாது.

எந்தத் தொழிலை நாம் தேர்வு செய்தாலும், அந்தத் தொழிலின் கொள்கைகளை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசுதான். இதற்கு ஏற்பதான் அத்தொழிலில் நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது. போதுமான வாய்ப்பு வசதிகள் கிடைப்பவர்கள் ஓரளவு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் திண்டாடுகிறார்கள். விவசாயம், நெசவு உள்ளிட்ட எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் போதிய வருவாய் இல்லை. படிக்க வசதியில்லை. படித்தாலும் வேலையில்லை. வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லை. விக்கிற விலைவாசியில் எதைத்தான் வாங்க முடியும்?. நேற்று தாராபுரத்தில் கத்தரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இவைகள்தானே நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சனைகள்.

பிள்ளைப் பேறு அவரவர் உடலியற்கூறு மற்றும் மரபு ரீதியான காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இன்று பொருள் ஈட்டும் நடவடிக்கையே மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவனை மலடாக்கி வருகிறது. பிறகு பிள்ளைப் பேறுமட்டும் எப்படி நல்லபடியாக அமையும்?.

உணவுப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவது போன்ற பல்வேறு காரணங்களால மனிதன் பலப்பல நோய்களுக்கு ஆளாகிறான். பிறகு எப்படி நலமோடு வாழமுடியும்?.

வரதட்சணைக் கொடுமை, மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகளால் வரும் தொல்லைகள், ஆண் வாரிசு இல்லை என்றால் அதற்குக் காரணம் ஆண்தான் என்றாலும் அதற்காக பெண்ணையே குற்றவாளியாக்கும் இந்தச் சமூக மடைமைத்தனம் என பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள். இவையும் இன்றைய சமுதாயத்தின் பொருள் உடைமை வெறியின் விளைவேயன்றி வேறல்ல.

ஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் துன்பங்களோடும் துயரங்களோடும்தான் வாழ்ந்து வருகிறோம். அதற்குக் காரணம் தனிப்பட்ட நபர்களின் ஜாதகமா அல்லது அரசின் செயல்பாடுகளா? இத்துன்பங்களும் துயரங்களும் அரசின் நல்ல கொள்கைகளால், செயல்பாடுகளால், சிறந்த சமூக அமைப்பால் தீருமா? அல்லது நாம் கடைபிடிக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் இத்துன்பங்களைத் துரத்துமா?

கருத்துரையிடுக Disqus

 
Top