0

"ஏழு கழுதை வயசாயிருச்சு இன்னுமும் உனக்கு உங்கம்மா வந்து ஊட்டியுடோணுமா?" பக்கத்து வீட்டுப் பொன்னியக்கா கேட்டது அவனுக்கு அவமானமாய்த் தோன்றியது...

ஐந்தாவது படிக்கும் தன்மகனுக்கு ஊட்டிவிடுவது ஆரம்பகாலங்களில் இன்பமளித்தாலும், பூவாத்தாளுக்கு வர வர அது ஒரு தொல்லை தரும் ஒன்றாகவே பட்டது. "ஏண்டா என்னைத் தொல்லை பண்றே?... மயிலானைப் பாரு!.. இருக்கற எடம் தெரியுதா ஒண்ணா?... அவன் பாட்டுக்கு பள்ளிக்கூடம் போறான்... வர்ரான்....! நீதேன் உசுர வாங்குற... நீயே போட்டுச் சாப்புடக் கூடாதா? நானேதான் ஊட்டிவிடோனுமா?" என்று பூவாத்தா கேட்டதும் வந்ததே கோபம் வேலானுக்கு, "போ... நீயொண்ணும் ஊட்டியுட வேண்டாம்... நானே அனாதையாட்டம் சாப்புட்டுக்கறேன். இனிமேலு நானுன்னைய அம்மான்னே கூப்புட மாட்டேன்... போ..." என்று பொருமியபடி எட்டி உதைத்தான். பூவாத்தா கையிலிருந்த தட்டு பறந்துபோய் அப்பத்தாவின் மாலை போட்ட நிழற்படம் வைத்து வணங்கும் மேசைக்கடியில் விழுந்தது. சாப்பாடு வீடேகமாய்ச் சிதறிப்போய்க்கிடந்தது. பூவாத்தாவுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "ஆனா... எங்கியோ போ.. உன்னையெல்லாம் பெத்ததுக்கு ஒரு உலக்கையும் உரலையும் பெத்து எடுத்திருந்தா ஊருச் சனமாவது நெல்லுக் குத்தும். யாரைக்கொண்டு ஆகறது உன்னைச் சமாளிக்கறதுக்கு.!" என்று திட்டித்தீர்த்தாள்.

பூவாத்தாளுக்கு வேலுச்சாமி மயில்சாமி என்று இரண்டு மகன்கள். அழுது அடம்பிடிக்கும் இந்த வேலுச்சாமி மூத்தவன். இளையமகன் மயில்ச்சாமி அமைதியானவன். யாரையும் தொல்லை செய்யமாட்டான். அவனுண்டு அவன் வேலையுண்டு என்றிருப்பவன்.

"பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்னு சொல்றானுங்க... கொஞ்சம் என்னன்னு கேளுங்க...!" என்று கத்திச் சொல்லிவிட்டு இவனிடம் திரும்பி, "அப்பன் வந்து நாலு பூசை போட்டாத்தான் புத்திவருமடா உனக்கு. நாஞ்சொன்னாக் கேப்பியா?" என்று மிரட்டினாள். அதற்கு அவன் மசிவதாய்த் தெரிவதில்லை. பூவாத்தாள் கத்தியதும் அங்கு வந்த வெங்கிடாசலம் கோபமாய்ப் பாய்ந்தார், "எங்கிருந்துடா எனக்கு வந்து பொறந்த? நாசமாப் போனவனே...! இப்ப பள்ளிக்கூடம் கெளம்பப் போறியா? இல்ல,..... ஏன்டி பூவா....... அந்தச் சட்டுவத்தைக் அடுப்புல காயப்போடு... பழுத்ததும் நாக்குல வெச்சு நாலு இழுப்பு இழுத்தாதான் புத்திவருமிவனுக்கு..." சிவந்த கண்களும் எச்சில் தெறிக்கும் பேச்சும் கொஞ்சம் வேலுச்சாமிக்கு மிரட்சியை உண்டுபண்ணியது. மூலையில் அடங்கி ஒடுங்கிப் போனான். அழுகை பொத்துக்கொண்டு வந்தது அவனுக்கு, "என்ன மாப்பிளே? எதோ பஞ்சாயத்து நடக்குதாட்டா இருக்குது? என்ன சமாச்சாரம்...? " என்றபடி வீட்டுக்குள் நுழைந்தார் மாரப்பன். மாரப்பன் பக்கத்துத் தோட்டத்து விவசாயி. அடிக்கடி வந்துபோகும் மனிதர். பூவாத்தாளுக்கு உறவுங்கூட. அவர் குரல் கேட்டதும் வேலானுக்கு கொஞ்சம் மனத்திடம் வந்தது. "அப்பாடா மாமன் வந்து காப்பாத்திட்டாரு..." என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட்டான். அப்பனும் மாரப்பனின் குரலைக் கேட்டதும் வெளியாசாரத்துக்குப் போய்விட்டார். மாரப்பனும் சோபாவில் உக்கார்ந்து தொலைக்காட்சி ரிமோட்டை எடுத்து "என்னப்பா கூட்டணி நிலவரமெல்லாம் தெரிஞ்சி போச்சா? எத்தனை தொகுதி கொடுத்துருக்காங்களாமா?" என்று கேட்டபடி இயக்கினார். செய்திகள் ஓட ஆரம்பித்திருந்தன.

பின்னாலேயே வந்து அமர்ந்த வெங்கிடாசலமும் கொஞ்சம் சிரிக்க முனைந்தபடி, "என்னத்தப் பிரிச்சானுக போங்க... இவுனுக தொகுதிக்கே இப்பிடி மொத்திட்டானுகன்னா... செயிச்சு வந்ததுக்கப்புற நாட்டை எங்க காப்பாத்தப் போறானுக போங்க... எல்லாம் காசுக்குப் பீ திங்கற நாயுக..." என்று விரக்தியை வெளிப்படுத்தியபடி மாரப்பனுக்கருகில் அமர்ந்தார். "பூவாத்தா...! உங்கண்ணன் வந்துருக்குது பாரு... காப்பித்தண்ணி கொண்டாந்து கொடு...!" என்று கூறிவிட்டு. நம்ம வேலானொண்ணும் சொன்னாக் கேக்க மாட்டாம்போல தெரியுது. எங்கியாவது நல்ல ஹாஸ்டல் பள்ளிக்கூடமிருந்தா சொல்லு.... கொண்டுபோய்த் தள்ளிட்டு வந்தரலாம், ஒரு ரெண்டுவருசம் கண்ணுக் காணாத எடத்துல இருந்தாத்தான் சொன்னபடி கேப்பான்.. இல்லைன்னா தருதலையாப் போயிருவான்... ஆமா!" என்று புலம்பலைத் துவக்கினார்.

"ஏமாப்ளே?... அவனென்ன பண்ணுனான்னு இப்ப அவனைக் கொண்டுபோயி ஹாஸ்டல் பள்ளிக்கூடத்துல உட்றலாமுன்னு சொல்றியேப்பா?" என்றார் மாரப்பன். காபித்தண்ணி வந்தது. "இவஞ் சொன்னபடியே ஒண்ணுங் கேக்கமாட்டீங்குறானுங்கண்ணா... ஒவ்வொரு நேரமும் கூடவே இருந்து இவனுக்கு நாமெல்லாம் பண்ணவேண்டியிருக்குது. இவனுக்கும் ரெண்டுவயசு சின்னவன் மயிலான் எவ்வளவோ பரவாயில்லீங்கண்ணா...! அவனே எல்லாம் பண்ணிக்கிறான்... ரகள பண்ணாம பள்ளிக்கூடம் போயிடறான், டியூசன் போயிடறான், சாப்பாடு போட்டுக் குடுத்தா குறைசெல்லாமச் சாப்புட்டுக்கறான்... இவனொன்னுத்துக்கும் லாயிக்கியில்ல... பெருந்தொல்லையா இருக்குதுங்கண்ணா! அதுதான் கொண்டோயி ஹாஸ்டல் பள்ளிக்கூடத்துல உட்டுட்டு வந்துரலாம்னு...!" என்று பூவாத்தாள் முடிக்கையில், காப்பித்தண்ணீயை சுர்ர்ர்ருண்ணு சத்தத்துடன் உறிஞ்சினார் மாரப்பன். அவரின் நினைவுகள் எங்கோ போனது. "சுந்தரப்பன் படிச்சுட்டு விவசாயக் கல்லூரியிலே பெரிய வேலைல இருக்கான்... நாமின்னும் நாலு ஏக்கரா தண்ணியில்லாத காட்டுல கடலைக்காயை போட்டு மழைக்கு வானத்தைப் பாத்துட்டு சுப்பக்கான்னு உக்காந்துட்டுக் கிடக்கறோம்....! இந்தச் சின்னப்பயன் வேலானிருக்கற மாதிரிதான் அன்னைக்கும் நாம இருந்தோம்... அதுநேலதான் இப்பிடி ஆயிப்போச்சு... நம்மளமாதிரியே இவனையும் உட்றக்கூடாது" இப்படியாக அவரது நினைவலைகள் ஏதோதோ எண்ணியது.

"மச்சானுக்கு என்ன ரோசனை...! கடலைக் காட்டை ரியலெஸ்டேட்காரன் கேக்கறானாக்கும்? குடுத்துறலாமான்னு யோசிக்கிறீங்களா?" கிண்டலான வெங்கிடாசலத்தின் கேள்விக்கு மாரப்பன் கண்களில் நீர் பனித்தபடி சொன்னார், "தப்புப் பண்றியோன்னு தோணுது மாப்ள...! பூவாத்தா உனக்கும் மாப்ளைக்கும் சொல்றது இதுதான். "வேலானைக் கெடுக்கறது நீங்கதான். சின்னவனை எப்பப் பாத்தாலும் இவனோடையே சோடிச்சுப் பேசி இவனோட மனச நோகடிச்சு வெச்சுருக்கீங்க... மொதல்ல இவன் பொறந்தப்ப பாசத்தைக் கொட்டிக் கொடுத்துபுட்டு இப்ப அந்தப் பாசம் தம்பிக்கும் பிரிச்சுக் கொடுத்ததுநேல வேலானுக்கு அதைத் தாங்கிக்க முடியிலன்னு எனக்குத் தோணுது. வேலானோட மனசு ரொம்பத் தங்கமானதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். மயிலாம் பொறந்ததுக்கப்புறம் இவனை நீங்க ஒதுக்க ஆரம்பிச்சுட்டீங்க. அவனோட நல்ல குணத்தை இவனோட சேத்திவெச்சுப் பேசப் பேச அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாயிடுச்சு." மாரப்பனின் பேச்சு பூவாத்தாளுக்கும் வெங்கிடாசலத்துக்கும் என்னடா இவரு நம்ம மேலயே தப்புன்னு சொல்றாருன்னு தோன்றியது.

மாரப்பன் தொடர்ந்தார், "தனக்கு அதிகம் தாய் தகப்பன் பாசத்தைக் கொடுக்கணும்னு அவன் ஏங்கறான். அதனாலதான் சோறுபோட்டு ஊட்டிவிடறது மொதல்கொண்டு எல்லா வேலையிலயும் அம்மாகாலைப் புடிச்சுகிட்டே சுத்துறான். இப்ப அவனை அன்பால திருத்தாம கொண்டுட்டுப் போயி ஹாஸ்டல் பள்ளிக்கூடத்துல உட்டுட்டீங்கனு வெய்யி.... அப்பறம் அவ்வளவுதான்... அவன் இன்னோரு மாரப்பனா வந்துடுவான். என் தம்பி சுந்தரப்பன மாதிரி வேண்டாம் ஏதோ ஓரளவு படிச்சு புத்தியோட பொழைக்க வேண்டாமா?" கண்களில் நீர் பனிக்க மாரப்பன் சொன்னதும் விக்கிப் போனார்கள் கணவனும் மனைவியும்.

"போங்க அவனை அன்பாச் சொல்லித் திருத்த வழிபண்ணுங்க... அதை உட்டுப்புட்டு ஹாஸ்டல் பள்ளிக்கூடம் அது இதுன்னு சொல்லிட்டு திரியாதீங்க... அப்படி ஹாஸ்டல்ல உடற மாதிரி இருந்தா என்ற தோட்டத்துல அவனிருக்கட்டும் அவனை நான் படிக்க வைக்கிறேன்...!" என்று கூறிவிட்டு அழுதுவிட்டதால் மனம் வெட்கி அங்கிருக்க மனமின்றி வெடுக்கென்று எழுந்து போய்க் காரவாசல்ல நிறுத்தி வெச்சிருந்த சைக்கிள எடுத்துக் கிளம்பினார். சோளக்காட்டுப் பயிர் ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்றதால் அவர் மறைய நிறைய நேரம் பிடிக்கவில்லை.
உள்ளே வந்த பூவாத்தா, வேலுச்சாமியைத் தேடினாள். மூலையில் ஒடுங்கிப் போயி அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயிக்கிடந்த வேலானை வாரி அணைத்துக் கொண்டாள். "என்ர சாமி... உன்னை இனிமேல் திட்டமாட்டங் கண்ணு... நீயி ஆஸ்டல் பள்ளிக்கூடமும் போகவேண்டாம் ஒண்ணும் வேண்டாம்... எப்பவும் எங்ககூடவே இருடா கண்ணு.. வாடா... நான் சோறு போட்டு ஊட்டிவிடுறேன்...." என்று கண்ணீர் மல்கினாள். தாயின் இந்த மனமாற்றத்துக்குக் காரணமான மாரப்ப மாமனைத் தெய்வமாக மனதுக்குள் அமரவைத்திருந்தான் வேலுச்சாமி.

கருத்துரையிடுக Disqus

 
Top