நீங்கள் வேலைக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று இண்டர்வியூ செய்பவர் தீர்மானிக்கும் விதத்தில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள், சேவைகள், தொழிலாளர்களின் திறமை, நிதி நிலைமை, உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், லாப நஷ்டங்கள், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது செயல்முறைகள் போன்ற விஷயங்களை பற்றி முடிந்த அளவு விவரங்களைச் சேகரித்துக் கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடக்க உள்ள இடம், நேரம் பற்றி உறுதியாகத் தெரிந்து வைப்பதுடன், எப்படி சரியான நேரத்துக்குள் அங்கு போய்ச் சேர வேண்டும் என்பதையும் முன்னதாகத் தீர்மானம் செய்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களை (Certificates) முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவர்கள் கேட்கக்கூடியதாக உங்களுக்குத் தோன்றும் கேள்விகளையும், நீங்கள் அவர்களை கேட்க நினைப்பவை பற்றியும் ஒரு குறிப்பை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள்தான் தகுதியானவர் என்று நினைக்கும் வகையில் பதில் அளிக்கவும். உங்கள் கெüரவமான உடை (Dress) அமைப்பும், ஒழுங்குமுறையும் (Manners) உங்களைப் பற்றி சாதகமாக அவர்களுக்குத் தெரிவிக்கும்.
பளிச்சென்று சுத்தமான ஸ்மார்ட்டாகத் தோற்றமளிக்கும் உடையை அணிந்து செல்ல வேண்டும். ஒரு தேர்ச்சி பெற்ற நேர்முகத் தேர்வாளர், உங்கள் டிரஸ், பாடி லாங்குவேஜ், முகபாவனைகள் இவற்றை வைத்தே உங்கள் மனதையும், உங்களையும் நன்கு எடை போட்டு விடுவார்.அதனால், நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட உடலசைவு, முக பாவனைகள் மூலம் எளிதில் உங்களை அவர் விரும்பக்கூடும். நீங்கள் அவரை வெற்றி கொள்ளலாம். நேர்மையாகவும், திறந்த மனதுடனும் இருங்கள். உள்ளே நுழையும்போதே சிநேக பாவத்துடனும் (Warm and Friendly) நம்பிக்கையுடனும் இருங்கள். கை குலுக்குவது, உங்களுடைய சிநேக பாவம், உற்சாகம், கவர்ச்சி போன்றவற்றைத் தெரிவிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நேராக, உறுதியுடன், வலிமையாக கொடுக்கப்படும் கை குலுக்கல் உங்களைப் பற்றிய பாஸிடிவ் விவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்கும்.
நீங்கள் இருக்கையில் உட்காரும் விதத்திலிருந்து உங்களிடம் மறைந்து கிடக்கும் விவரங்களை அவர்கள் அறியக்கூடும். அதனால், உங்களுக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் நேராக நிமிர்ந்து அமரவும். உங்கள் கைகள் மடிமீது அல்லது இருக்கையின் கைகள் மீது இருக்கும்படி அமரவும். அமைதியாக, வசதியாக உட்காரவும். ரிலாக்ஸ் என்றால், வீட்டில் சோபாவில் அமருவது போல கால்கள் நீட்டி அமர்வது இல்லை. உங்கள் முழங்கால் இண்டர்வியூ செய்பவரை நோக்கி இருக்கட்டும். அது, நீங்கள் அவர்கள் மீது கவனமாக இருப்பதைக் காட்டும்.
அப்படி அமருவது கஷ்டமாக இருந்தால், உங்கள் கைகள் நீங்கள் சொல்வதைத் தொடர்வது போல இருக்கலாம். குறிப்பிட்ட பாயிண்டில் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை அது காட்டும். ஆனால், மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டி அமர்ந்தால் உங்களுடைய பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை (Negative) பிரதிபலிக்கும்.
மூக்கைத் தொடுதல், கன்னத்தைத் தேய்த்தல், வேறு எங்கோ நோக்குதல் போன்றவை உங்களிடம் ஒருவித சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவருடைய மேஜையில் உங்கள் கைகள், காகிதம், பைல்கள் மூலம் அதிகப்படி இடம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வார்த்தைகளைவிடக் கண்கள் அதிகம் பேசக் கூடியவை. தேர்வாளரை உங்கள் நிலையான, உண்மையான பார்வையால் சந்தியுங்கள். இடையே கண் இமைகளை மூட மறவாதீர்கள். அதற்காக, கண்களையே சிறிது நேரம் மூடுவது தவறு. வழக்கத்துக்கு அதிகமாகக் கண் சிமிட்டுதலும், அடிக்கடி இங்கும் அங்கும் நோக்குவதும், மிகக் குறைவாக அவருடைய கண்களைச் சந்திப்பதும் உங்களுடைய பலவீனம் (Weakness) மற்றும் குறைபாடுகளைக் குறிக்கும். அவரை நோக்குவதும் கண்கள் லெவலுக்கு கீழே செல்லக்கூடாது. பொதுவாக, பிடித்தமற்ற செய்கைகள், குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
இண்டர்வியூ நேரம் முழுவதும் தைரியமாகவும், பாஸிடிவ் ஆகவும் இருங்கள். கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய் பேசாதீர்கள். குடும்ப விவரம் பற்றி சுருக்கமாகத் தெரிவியுங்கள். கடைசியாகத் தேர்வு செய்தவருக்கும், அந்த அலுவலகத்துக்கும் நன்றி கூறி விடை பெறவும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.