நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
கண்டந்திப்பிலி
தேவையான பொருட்கள்:-
புளி – எலுமிச்சம்பழ அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கண்டந்திப்பிலி குச்சிகள் – சிறிதளவு
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – கால் டீஸ்பூன்
தாளிக்க:-
நெய் – கால் டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
செய்முறை:-
சீரகம் தவிர மற்றவற்றை வாசனை வரும் வரை வறுத்து கடைசியாக சீரகத்தைப் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை ரசத்தில் சேர்க்கவும். நுரை கூடி வந்ததும் இறக்கி வைக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். அருமையான கண்டந்திப்பிலி ரசம் தயார்.
கருத்துரையிடுக Facebook Disqus