0
poosaNikkaai  puLi(kalyaana) koottu
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய் – 1/2 கிலோ
மஞ்சள் பட்டாணி – 1/4 கப்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தழை
வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 3, 4
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1/2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.


செய்முறை:
  • ஊறவைத்த பட்டாணியையும், துவரம் பருப்பையும் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • பூசணிக்காயை, தோல், குடல் பகுதி நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியாவை பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த பட்டாணி, நறுக்கிய பூசணிக்காயைச் சேர்க்கவும்.
  • புளி நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நிதானமான தீயில் வேகவைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறிவிடவும். 
  • காய் வெந்ததும், அரைத்த விழுது, துவரம் பருப்பு சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, மேலும் 2, 3 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு, சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.
* கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற நாட்டுக் காய்களிலும் இந்தக் கூட்டை செய்யலாம்.
* இதில் பட்டாணி இல்லாமல் வெள்ளைக் கொத்துக்கடலை, தட்டைப் பயறு வகைகளும் அந்தந்த காய்களுக்கு ஏற்றமாதிரி உபயோகிக்கலாம். எந்தப் பயறுமே ஊறவைத்து தயாராக இல்லையென்றாலும் கடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, காயோடு சேர்த்து வேகவிடலாம்.
* புளி மிகக் குறைவாகவே சேர்க்கவேண்டும். குழம்பு ரசத்திற்கு கரைத்து வைத்திருப்பதில் தெளிந்து மேலாக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் மெனக்கெடத் தேவை இல்லை.

கருத்துரையிடுக Disqus

 
Top