0
வீட்டில் ஓய்வாக இருந்தால், மதிய உணவுக்கு பின், குட்டியாக ஒரு தூக்கம் போடலாம். அலுவலகத்தில் இருக்கும்போது, குட்டித் தூக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

மதிய உணவு சாப்பிட்ட பின், இருக்கையில் அமர்ந்தால், அப்படியே கொஞ்ச நேரத்துக்கு, கண்ணை கட்டும். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத சிலர், இருக்கையில் அமர்ந்தபடியே, மெல்ல, மெல்ல, சாமியாடத் துவங்கி விடுவர். அடுத்த சில மணி நேரத்துக்கு, இந்த இன்ப அவஸ்தை தொடரும்.
நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த பிரச்னை இருக்கிறது.

இந்த பிரச்னைக்கு, சுவீடன் நாட்டில், பக்காவான ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். தலைநகர் ஸ்டாக்ஹோமில், அலுவலகங்கள் அமைந்துள்ள இடத்துக்கு மையப் பகுதியில், "லன்ச் டான்ஸ் கிளப்' என்ற ஒரு இடம் உள்ளது. அக்கம், பக்க அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லாம், மதிய உணவுக்கு பின், இங்கு கூடி விடுவர். அந்த அறை, நைட் கிளப் போல், அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மிகப் பெரிய ஸ்பீக்கர்களில், துள்ளலான இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அப்புறம் என்ன?
அடுத்த ஒரு மணி நேரத்துக்கு, அங்கு ஆட்டம், களை கட்டும். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், அலுவலகங்களில் பணியாற்றும் ஏராளமானோர், அங்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு, அதன் பின், சமர்த்து பிள்ளைகளாக, அலுவலகத்துக்கு பணியாற்றச் சென்று விடுவர்.

இந்த ஆட்டத்தால், தூக்கம் கலைவதோடு, மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பதாக கூறுகின்றனர், ஊழியர்கள். இதற்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சுவீடனின் மற்ற நகரங்களுக்கும், இந்த லன்ச் டான்ஸ் கலாசாரம் வேகமாக பரவி வருகிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top