0


 
முருகனுக்கு இருபத்தி ஐந்து வயது தொடங்கிவிட்டது. ஆறு வருஷமாக ஒரே மெக்கானிக் ஷாப்பில் கூலி வேலை செய்து வருகிறான். இனியும் இப்படி கூலிக்கு வேலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தான். வேலையை விட்டு நின்றான்.

தனியாக மெக்கானிக் ஷாப் வைத்து, தானும் ஒரு முதளாளி ஆகி, நல்ல இடத்தில் பெண் பார்த்து, திருமணம் செய்து கொண்டு நல்லபடியாய் வாழ நினைத்தான். கடைக்கு அட்வான்ஸ், மெஷின்கள் என எல்லாவற்றிற்கும் முதல் போட வேண்டும் என்பது அதன் பிறகுதான் உறைத்தது. பணம் கேட்டு பல இடங்களில் அலைந்தான். யாரும் உதவவில்லை.

வங்கியில் லோன் கேட்டான். அங்கே சொத்து ஜாமீன் கேட்டார்கள். இப்படியே மாதக்கணக்கில் அலைந்து சோர்ந்தான்.

அன்றும் அப்படித்தான்… வங்கியிலிருந்து சோர்வோடு வீடு திரும்பும் போது, வீட்டு வாசலில் பழைய மெக்கானிக் ஷாப் முதலாளியின் வண்டி நின்றது. முருகனின் அப்பாவிடம் அவர் பேசுவது வாசல் வரை கேட்டது.

“முருகன் மேலே ரொம்ப நம்பிக்கை வைச்சிருந்தேன். இப்படி ஏமாத்துவான்னு நினைக்கல. சொல்லாம கொள்ளாம நின்னுட்டான். எனக்கும் வயசாச்சு… மெக்கானிக் ஷாப்பை அவனுக்கே கொடுத்து, என் ஒரே பொண்ணையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம்னு நினைச்சிருந்தேன். அதுல மண் அள்ளிப் போட்டுட்டான். சரி, அடுத்த வாரம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.. அதுக்காவது வரச் சொல்லுங்க..!”

கருத்துரையிடுக Disqus

 
Top