0



பெங்களூர் : திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு திருமலை , திருப்பதி தேவஸ்தானத்திடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்டுள்ளார் பெங்களூரை சேர்ந்தவர். பத்மாவதி தாயாரை காதலித்த எழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை , திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்மமூர்த்தி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குபேரனிடம் கடன் பட்ட கதை

திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார்.
அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார்.  மகாலட்சுமிக்கு வந்ததே கோபம். எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல்,  ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.

*காதல் மலர்ந்தது எப்படி?

மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக  பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

*கடன் பட்டது எப்படி?

உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.

*வட்டி கட்டுவது எப்படி?

அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

*குபேரனுக்கு போகுமா?

குபேரனுக்கு கொடுப்பதற்காக காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக திருமலையில் அன்னதானம் முதலான பல வசதிகள் செய்து தருவதும், பக்தர்கள் தரிசித்து மகிழ பலவாறாக பெருமாளுக்கு அலங்காரம் செய்வதும், இந்தியா முழுவதும் பல தர்ம காரியங்களை நடத்துவதுமாக (குபேரனுக்கு) போய்ச் சேருகிறது என்றும் சொல்லலாம்.

ஆலோசனை நடத்தி பதில் தேவஸ்தானம் தகவல்

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் கூறுகையில், 'ஏழுமலையான் தனது திருமணத்துக்காக வாங்கிய கடன் எவ்வளவு என்பது உள்ளிட்ட கேள்விகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. வந்தால், அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் ஆகியோருடன்  ஆலோசனை நடத்தி பதில் அளிக்கப்படும்'' என்றார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் ரவி கூறுகையில், ‘'இது மதம் தொடர்பான பிரச்னை. இந்த மாதிரி கேள்விகள் கேட்பது பைத்தியக்காரத்தனம்''’ என்றார்.

கடந்தாண்டில் (2011) தேவஸ்தானத்துக்கு கிடைத்த வருமானம்
உண்டியல் காணிக்கை    ரூ. 731.00 கோடி
வங்கி டெபாசிட் வட்டி    ரூ. 405.23 கோடி
விஐபி டிக்கெட் வருவாய்    ரூ. 165 கோடி
முடி காணிக்கை வருவாய்    ரூ. 179 கோடி
பிரசாதம் விற்பனை    ரூ. 135 கோடி
தங்கும் அறைகள் வருவாய்    ரூ. 69 கோடி
ஆர்ஜித டிக்கெட் வருவாய்    ரூ. 43 கோடி
தங்க டாலர் விற்பனை    ரூ. 17 கோடி
ஓட்டல், கடைகள், மொட்டை கட்டணம்    ரூ. 90.47 கோடி

*புராண காலத்தில் பத்மாவதி தாயாரைதிருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?
அதற்கு எவ்வளவு வட்டி?

*கடனை அடைக்க பக்தர்களிடம் காணிக்கை பெற்று வரும் ஏழுமலையான் இதுவரை எவ்வளவு கடனை அடைத்துள்ளார்?

*பாக்கி கடன் எவ்வளவு உள்ளது?

*குபேரனிடம் வாங்கிய கடனுக்கான அசல் தொகை செலுத்தப்படுகிறதா?

*வட்டி மட்டும் செலுத்தப்படுகிறதா? அல்லது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து செலுத்தப்படுகிறதா?

*எழுமலையான் வாங்கிய கடனுக்காக இதுவரை பக்தர்களிடம் வசூல் செய்துள்ள காணிக்கை எவ்வளவு?

கருத்துரையிடுக Disqus

 
Top