உடம்பில்
தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர்கள்;
சாப்பிடுகிறீர்கள். ஓய்ந்து போய் உட்காரும் காலத்துக்கு என்ன சேர்த்து
வைக்கிறீர்கள்...?
மாதச் சம்பளம் வாங்கும் நூறு பேர்களிடம் இந்த கேள்வியை
கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், " விக்கிற விலைவாசியில என்னத்தை
சேர்த்து வைக்கிறது ?" என்கிற புலம்பல்தான் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல,
அறுபது ஆண்டுகளுக்கு முன்பும் இப்படிதான் இருந்தது. இதை உணர்ந்த அரசாங்கம்,
தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக கொண்டு வந்த
திட்டம் தான் பிராவிடண்ட் ஃபண்ட் என்கிற தொழிலாளர் சேமநல நிதி. இது 1952
-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்ஊதியத் திட்டத்தையும் இதனோடு
சேர்த்து செயல்படுத்தி வருகிறது அரசாங்கம்.
எவ்வளவு பிடிப்பார்கள்?
இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதமே
பி.எஃப். பிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பொதுவாக, ஊழியர்களின் அடிப்படை
சம்பளம்(Basic Salary) மற்றும் அகவிலைப்படியில்(Allowances) 12% பி.எஃப்.
ஆக பிடிக்கப்படும் . தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து
பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் போடும். இது தவிர, பணியாளர்
விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக பி.எஃப். கணக்கில் பிடிக்கச்
சொல்லலாம். ஆனால், இந்த தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும்
செலுத்தாது.
எப்போது பென்ஷன் கிடைக்கும்?
- குறைந்த பட்சம் 10 வருடங்கள் பி.எஃப். பிடிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். இல்லாத பட்சத்தில் குடும்ப ஓய்ஊதியக் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையை குறிப்பிட்ட விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
- பணியில் இருந்து விலகும் போது பி.எஃப். பணத்தை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம்
- பொதுவாக, 58 -வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஓய்ஊதியம் பெறலாம். அப்படி இல்லாமல், 10 வருடம் திட்டத்திலிருந்து 50 -வது வயதில் பணியில் இருந்து விலகினாலும் முன்கூட்டியே ஓய்ஊதியம் பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது. 58 -வது வயதில் வர இருக்கும் பென்ஷனில் வருடத்துக்கு 4% குறைத்துக் கொண்டு தான் பென்ஷன் பெறலாம்.
- பணியில் இருக்கும் போது ஊனம் அடைந்து பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டால் ஓய்ஊதியம் கிடைக்கும். இதற்கு வயது மற்றும் பணிக் கால வரம்பு ஏதும் இல்லை.
- இதில் உறுபினராக இருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஓய்ஊதியம் கிடைக்கும். இது கணவன் / மனைவிக்கு செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஓய்ஊதியம் வழங்கப்படும். இது கணவன் /மனைவியிடமே வழங்கப்படும். பிள்ளைகளுக்கான பென்ஷன் அவர்களின் 25 வயது வரை வழங்கப்படுகிறது. மணமான மகள்களுக்கும் 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும்.
- கணவரோ, மனைவியோ மறுமணம் செய்து கொண்டால், ஆதரவற்றோர் ஓய்ஊதியமாக குழந்தைகளுக்கு அதிக ஓய்ஊதியம் வழங்கப்படுகிறது.
- பணி ஓய்வு பெறும் போது பென்ஷன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை போல் 100 மடங்கு வரை முன்பணமாக பெறும் வசதியும் உள்ளது. முன்பணம் பெற்றால் அந்த தொகை மற்றும் அதற்குரிய வட்டியை கழித்து விட்டு மீதி ஓய்ஊதியமாக வழங்கப்படும். ஓய்ஊதியதாரரின் மரணத்துக்குப் பிறகு நியமனதாரருக்கு ஓய்ஊதியம் செல்லும். கடைசி 12 மாதங்களில் வாங்கிய சம்பளம் மற்றும் குடும்ப ஓய்ஊதியத் திட்டத்திற்கு பணம் செலுத்திய காலம் போன்றவற்றின் அடிப்படையில் ஓய்ஊதியம் நிர்ணயக்கப்படுகிறது. தொழில் அதிபர்கள் ஓய்ஊதியத் தொகையை செலுத்தவில்லை என்றாலும் ஓய்ஊதியத்துக்கான உத்தரவாதத்தை அரசு அளிக்கிறது. பென்ஷனுக்கு அடிப்படை வரம்புக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டி இருக்கும்.
பி.எஃப். சான்றிதழ்!
பத்தாண்டுக்கும் குறைவான பணிக் காலத்துடன் ஒரு நிறுவனத்திலிருந்து
விலகும் போது, சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு ஏதாவது நிறுவனத்தில்
சேரும்பொழுது இதைத் தொடர்ந்துக் கொள்ளலாம். இந்தச் சான்றிதழ் வைத்து
இருக்கும் நபர் 58 வயது பூர்த்தியாகும் முன்பே மரணம் அடைந்துவிட்டால் அவரது
குடுபத்தினருக்கு பணிக் காலத்தைக் கணக்கில் கொள்ளாமலேயே ஓய்ஊதியம்
வழங்கப்படும்.
தொழிலாளர் காப்பிட்டு திட்டம் !
பி.எஃப் திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்தத் திட்டம்
பொருந்தும். இதற்கு என தனியாக ஊழியரின் கணக்கில் பணம் எதுவும்
பிடிப்படுவதில்லை. இதற்கான பங்களிப்பாக தொழிலதிபர்கள், ஊழியர்களின் மொத்தச்
சம்பளத்தில் 0.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பணியில்
இருக்கும் போது இறந்தால் அவரது குடும்பத்துக்கு 1,00,000 ரூபாய் வரை
காப்பீடுத் தொகையாக வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு.. !
மாற்றுத் திறனாளிகளை தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு
எடுப்பதை ஊக்கப்படுத்த 2008 -ல் நடவடிக்கை எடுத்தது அரசு. அதாவது, மாற்று
திறனாளிகளை வேலைக்கு எடுத்தால் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி.எஃப். சந்தா தொகையை மூன்று வருடங்களுக்கு அரசே செலுத்தும். இதற்காக 11 -ம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-12) ரூ-1,800 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசாங்கம்.
வரிச் சலுகை !
வருமானவரிப் பிரிவு 80 சி-ன் கீழ் ஒரு நிதி ஆண்டில் 1 லட்ச ரூபாய் வரைக்கும் பி.எஃப். முதலீட்டுக்கு வரிச்சலுகை இருக்கிறது. பணி ஓய்வின் போது மொத்தமாக கிடைக்கும் தொகைக்கும் வரி இல்லை.
வலைத்தளம்:-
Employees' Provident Fund Organisation - http://www.epfindia.com/
பி.எஃப். பற்றிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் சொல்லிவிட்டோம். இனி
இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை! உங்கள் மேலான கருத்துகளை
தெரிவிக்கவும்!
கருத்துரையிடுக Facebook Disqus