மேலதிகாரிகளுடன் ஒத்துவராத காரணத்தால் இந்திய ராணுவத்தில் இருந்து ஒரு வருடத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் என்ற அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அன்டனி இந்த எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.


கடந்த 2011-ம் ஆண்டு, ஓய்வு பெறும் வயது வரும் முன்னரே, தாமாக முன்வந்து ராணுவத்தில் இருந்து விலகியவர்களின் எண்ணிக்கை 10,315. 2010-ல் இந்த எண்ணிக்கை 7,249 ஆக இருந்தது.

இந்த ஆண்டு, ராணுவத்தில் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் இடையிலான இரண்டு பெரிய மோதல்கள் நடைபெற்றன. லடாக்கில் ஒரு சம்பவமும், ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சம்பா செக்டரில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றிருந்தன. இந்த இரு மோதல் சம்பவங்களையும் சீரியசாக எடுத்துள்ள ராணுவத் தலைமை, தற்போது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ள நிர்வாக முறை, பழைய பிரிட்டிஷ் காலத்து நடைமுறைதான். அந்த நாளைய முறையில், மேலதிகாரிகள் ஜவான்களை கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல நடத்துவதே வழக்கம்.

கண்களை மூடிக்கொண்டு உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வழமை ராணுவத்தில் உள்ளது என்றாலும், பழைய பிரிட்டிஷ் பாணியில், ஜவான்களை அதிகாரிகள் தமது சொந்த வேலைகளை செய்வதற்கு ஏவுவதே அதிகம்.

இந்த விவகாரத்தை வேறு விதமாக டீல் பண்ணி, இரு தரப்புக்கும் இடையில் உள்ள முறுகலை போக்க, புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது இந்திய ராணுவம். இதன்படி, ‘சகாயக்’ என தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க உள்ளனர்.

சகாயக் பிரிவில் உள்ளவர்கள்தான், அதிகாரிகளின் ஷூகளை பாலிஷ் செய்வது, சீருடைகளை துவைப்பது, அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வார்கள். மற்றைய ஜவான்களை இந்த வேலைகளில் அதிகாரிகள் ஈடுபடுத்த முடியாது!
 
Top