பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில், இரு மடங்காக உயர்ந்துள்ளது. இருப்பினும், அவரது அமைச்சரவை சகாக்களை ஒப்பிடுகையில், பிரதமரின் சொத்து மதிப்பு மிகவும் குறைவே.

பிரதமர் உள்பட, மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், பிரதமர் அலுவல இணைய தளத்தில், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. அதேபோல், இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மன்மோகன் சிங்கின், சொத்து மதிப்பு, 10.73 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை மதிப்பை ஒப்பிடுகையில், இது, 100 சதவீதம் அதிகம். சண்டிகர் மற்றும் டில்லி நகரங்களில், பிரதமருக்கு சொந்தமாக, இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றின் தற்போதைய மதிப்பு, 7.27 கோடி ரூபாய். பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு கிளைகளில், மன்மோகன்சிங் கணக்கில், 3.46 கோடி ரூபாய் உள்ளது. 2.75 லட்சம் மதிப்பில், 150 கிராம் நகைகள் உள்ளன.

கடந்த ஆண்டு இருந்த, அதே சொத்துக்கள்தான், இப்போதும், பிரதமர் பெயரில் இருக்கின்றன. ஆனால், அரசால் நியமிக்கப்பட்ட, அலுவலர் மூலம், மதிப்பீடு செய்யப்பட்டதில், பிரதமரின் சொத்து மதிப்பு, இரு மடங்காக உயர்ந்துள்ளது.மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக, மாருதி 800 கார்தான், உள்ளது. அதன் மதிப்பு, 21 ஆயிரம் ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களில், பிரபுல் பட்டேலின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு, 52 கோடி ரூபாயாகவும், சரத் பவாரின் சொத்து மதிப்பு, 22 கோடி ரூபாயாகவும் உள்ளது.மத்திய அமைச்சர்களில், மிகவும் வசதி குறைந்த அமைச்சராக இருப்பது, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியே. இவரது சொத்து மதிப்பு, 55 லட்சம் ரூபாய் மட்டுமே. அமைச்சர்களில் இவர் மட்டுமே லட்சாதிபதி.இவ்வாறு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Top