டிரைவிங் பொஷிசன்:
இருக்கையில் அமர்ந்தவுடன் சீட் பெல்ட்டை முதல் வேலையாக போட்டு கொள்ளுங்கள். ஸ்டீயரிங் வீலை சரியாக பிடித்துக் கொண்டு முழங்காலை சிறிதளவு மடக்கிக் கொண்டு இருக்கையை அதற்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ள வேண்டும். சில கார்களில் சீட் அட்ஜெஸ்ட்மென்ட்டை புரோகிராம் செய்தும் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும்.
சரியான வகையில் அமர்ந்து கார் ஓட்டும்போது அதிக பாதுகாப்பான உணர்வை தரும். பின்புறம் அதிகமாக சாய்த்துக்கொள்ளக் கூடாது. இது டிரைவிங்கின்போது உடலை மந்தமாக்கி சீக்கிரமே களைப்பாக்கவோ அல்லது தூக்கம் வருவதற்கோ வழி வகுக்கும்.
கடிகாரத்தில் 9 மணி மற்றும் 3 மணிக்கு முள் இருப்பது போன்று 180 டிகிரி கோணத்தில் ஸ்டீயரிங் வீலில் இரு கைகளையும் பிடித்து ஓட்டுவது நலம். அவசர சமயங்களில் ஏர்பேக் விரியும்போது கைகளில் காயங்களை ஏற்படுத்தாது. மேலும், கைகள் பின்னுவதற்கான வாய்ப்பும் குறையும்.
ரியர் வியூ மிரர்கள்:
காருக்கு வெளியே மற்றும் உட்புறம் பொருத்தப்பட்டிருக்கும் பின்புறம் பார்ப்பதற்கான கண்ணாடிகளை சரியான திசையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சரியான திசையில் உங்களுக்கு ஏற்ற வைகையில் திருப்பி கொள்ள வேண்டும்.
கோ டிரைவர்:
தூங்கி வழியும் நபர்களை பக்கத்தில் அமர வைத்து டிரைவிங் செய்ய வேண்டாம். குழந்தைகளை முன் இருக்கையில் அமர வைத்து பயணம் செய்வதை தவிர்க்கவும்.
மியூசிக் சிஸ்டம் வால்யூம்:
ஸ்டீரியோ சிஸ்டத்தில் அதிக சப்தம் எழுப்பும் வகையில் வால்யூம் வைக்க வேண்டாம். இது கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதோடு சமயத்தில் சக பயணிகளுக்கு எரிச்சலை கொடுக்கும்.