வீடு கட்டும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக உழைத்தும், பிச்சை எடுத்தும் வங்கியில் லட்சக்கணக்கான ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர் ஒருவர், அதை அனுபவிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டு தன்னார்வ சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.


சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் முன், முதியவர் உடல் பலவீனமான நிலையில் காணப்பட்டார். ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., விஜயலட்சுமி, தலைமைக் காவலர் புஷ்பலதா ஆகியோர் முதியவரை போரூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்து முதியவரிடம் தெரிவித்தனர். முதியவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் உதவியுடன் தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். சம்பவத்துக்குப்பின் ஏசுமுத்து என்பவர் போலீஸ் நிலையத்தில் முதியவர் தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் பெயர் ஆறுமுகம். அவருக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. அதில், நான்கு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.

முடக்கம்: இதையடுத்து, போலீசார் வங்கியில் விசாரணை நடத்தினர். தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.

முதியவர் ஆறுமுகத்தின் பணம் சேமிப்பு குறித்து ஏசுமுத்து கூறியதாவது: செஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் தனது எட்டாவது வயதில் சென்னைக்கு வந்தார். கிடைத்த வேலையை செய்தார். பின், திருவான்மியூர் பகுதியில் குப்பை பொறுக்கினார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். பின், அவரிடம் இருந்து பிரிந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக பெசன்ட் நகர் சிவன் கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும்போது, என்னுடன் பழக்கமானார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தேன். என் மீது நம்பிக்கை எற்படவே, திருவான்மியூர் பகுதியில் இருந்த வங்கி கணக்கை பெசன்ட் நகருக்கு மாற்றித் தரும்படி கூறினார். அதன் பின், அவர் பிச்சை எடுத்து சம்பாதித்து மாதா மாதம் 5,000த்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தருவார். அதை நான் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தேன். குறிப்பிட்ட தொகையை வட்டிக்கும் கொடுத்திருந்தார். அதை வாங்கிய பலர் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். அசைவ உணவைக்கூட சாப்பிட மாட்டார். அவருக்குப் பிடித்த உணவு கூழ் மட்டுமே. அதையே தினமும் வாங்கித் தரும்படி கூறுவார். வெயில், மழை என பல ஆண்டுகளாக நனைந்தாலும் அவருக்கு சளி பிடித்ததில்லை. சமீபத்தில் அவரின் கால் செயலிழந்து போனதால், அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

சொந்த வீடு: இப்படி பணத்தை சேமித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டால், "எனது லட்சியமே சொந்த வீடு வாங்கி அதில் குடியேற வேண்டும். அதற்காகத்தான் வாயை கட்டி, வயிற்றை கட்டி சம்பாதிக்கிறேன்' என கூறுவார். கடைசியாக அவர் என்னிடம் கொடுத்த, 49,000 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி விவரம் அளிக்க அவரை தேடிய போதுதான், அவரை போலீசார் அழைத்துச் சென்ற விவரம் அறிந்தேன். இவ்வாறு ஏசுமுத்து தெரிவித்தார்.
 
Top