டெங்கு காய்ச்சலால் கடந்த 10 ஆம் திகதி பீடிக்கப்பட்டு லேடி ரிச் வே வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி இறந்த தரம் 05 மாணவி இறக்கின்றமைக்கு இரு நாட்களுக்கு முன்னர் பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்கக் கூடிய கடிதம் ஒன்றை அம்மாவுக்கு எழுதி இருக்கின்றார்.

இவரின் பெயர் அமாதி சிதுமினி. வயது 10. பாணந்துறையில் வசிப்பவர்.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையை மிகவும் திறம்பட செய்து இருந்தார்.
இவர் பிறக்கின்றமைக்கு முன்பே குடும்பத்தை உபேசித்து விட்டு தகப்பன் சென்று விட்டார்.

இந்நிலையில் இவரை பெற்று, வளர்த்து, ஆளாக்க அம்மா பட்ட கஷ்டப்பாடுகளை நினைவு கூர்ந்து இக்கடிதத்தை வைத்தியசாலையில் வைத்து எழுதி இருக்கின்றார்.

கடிதத்தின் தமிழ் வடிவம் வருமாறு:-

“ அம்மா… உங்கள் உதிரத்தை எனக்கு பாலாக்கி தந்தீர்கள் ஏன் தந்தீர்கள்? உங்கள் இதயத்தில் இருந்து எப்போதும் பாசத்தை எனக்கு நீங்கள் பொழிந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

நீங்கள் எனக்கு உணவூட்ட எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை நான் அறிவேன். உங்கள் சாப்பாட்டை எனக்கு கொடுத்து விட்டு நீங்கள் பட்டினி கிடந்து இருக்கின்றீர்கள்.

நான் வளர்ந்து பாடசாலைக்கு செல்ல தொடங்கியமை முதல் எனக்கு நல்ல விடயங்கள், கெட்ட விடயங்கள் ஆகியவற்றை சொல்லித் தந்தீர்கள். வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுரைகள் கொடுத்தீர்கள்.

பள்ளிக்கூடப் பாடங்கள் சொல்லித் தந்தீர்கள். சித்திரங்கள் வரையப் பழக்கினீர்கள். நான் தரையில் காலடி எடுத்து வைத்து நடக்கப் பழக்கினீர்கள். சமுதாயத்தில் வாழ வேண்டிய முறையை சொல்லித் தந்தீர்கள்.
என்னை ஒரு நல்ல பிரஜையாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே இவை அனைத்தையும் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன்.

நான் சிறுவயதில் தரையில் விழுந்தபோது எல்லாம், அழுதபோதெல்லாம் என்னைத் தூக்கி ஆறுதல் படுத்துகின்றமையை சிரமமாக ஒருபோதும் நீங்கள் கொள்ளவே இல்லை.

என்னை ஆறுதல் படுத்துகின்றமைக்காகவும், சந்தோஷப்படுத்துகின்றமைக்காகவும் கதைகள், பாட்டுக்கள் போன்றவற்றை சொன்னீர்கள்.

நான் நோய் வாய்ப்பட்டபோதெல்லாம் எனக்கு அருகிலேயே எப்போதும் நன்றி பணிவிடைகள் செய்தீர்கள்.

பெப்ரவரி மாதம் எனது பிறந்த நாள். தொடர்ந்து ஏப்ரல் மாதம் வருடப் பிறப்பை ஒரு முறை கொண்டாடினோம்.

அப்போது நான் ரொம்பவே சின்னப் பிள்ளை. வீட்டுத் தோட்டத்தில் பட்டாசு வெடிக்க வைத்து விளையாடியமையில் எனது காலை எரித்துக் கொண்டேன்.
நீங்கள் என்னை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றீர்கள். நான் குணம் ஆகின்ற வரை எனக்குப் பக்கத்திலேயே நின்றீர்கள். எனக்கு இச்சம்பவங்கள் எல்லாம் மிகவும் நன்றாகவே நினைவில் உள்ளன. இந்த இடைவெளியை பூர்த்தி செய்யுங்கள் ……… ”

சிறுமியின் தாய் ஊடகவியலாளர்களுக்கு இக்கடிதத்தைக் காட்டினார். மகள் கடிதத்தில் விட்டுச் சென்ற இடைவெளியை ஓம் என்கிற சொல்லால் நிரப்பினார் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.



 
Top