திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி, உறுப்பு தானத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் , காலேஜ் சாலையை சேர்ந்தவர் சிவசுப்ரமணி. இவரது மனைவி ஜானகி. சிறு வயது முதலே சமூகப் பணியில் சிவசுப்பிரமணி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


திருமணத்துக்கு பின், தன் மனைவியோடு, மாநிலம் முழுவதும் உடல் உறுப்பு தானம், ரத்த தானத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தம்பதி

சிவசுப்ரமணி, ஜானகி ஆகியோர் கூறியதாவது:

கடந்த, 2008 ஜன., 31ம் தேதி முதல், ரத்த தானம், கண் தானம், உடல் தானம், உறுப்பு தானத்தை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நாங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கிய நாளன்று, இந்திய ராணுவத்துக்கு, எங்களது உடலை தானம் செய்தோம். இந்தியாவிலேயே ராணுவத்துக்காக உடலை தானம் செய்த முதல் தம்பதி என்ற பெருமையை நாங்கள் பெற்றோம்.

கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், திருச்சி, சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட, 12 மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளோம். மாதந்தோறும் பத்து நாள், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம்.மற்ற நாளில், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து, அதில் வரும் கூலியை வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். பிரச்சாரத்தின் போது, கழுத்தில் உண்டியலை மாட்டிக் கொண்டு, மக்களிடம் நிதி கேட்போம். இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, துண்டு பிரசுரம் அச்சிட்டு, மக்களுக்கு விநியோகிப்போம்.

நாமக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது, முன்னாள் கலெக்டர் சகாயம், எஸ்.பி., பாரி ஆகியோர் பாராட்டினர். எங்களது விழிப்புணர்வு பிரச்சாரத்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ரத்ததானம், உறுப்பு தானம், உடல் தானம் செய்வதாக உறுதிமொழி வழங்கியுள்ளனர்.சில ஆண்டுக்கு முன், என் கணவருக்கு, வலது கையும், இடது காலும் செயலிழந்தது. ஆனாலும், நாங்கள் சாகும் வரை, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
Top