இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது கைகூடும். கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தீபத் திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமான் ஒளிமயமாகக் காட்சியளித்ததை நினைவு கூறும் வகையில் தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த நாள் தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

“இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்” என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். இத்திருநாள், முருகக் கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்த பின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.
விரதமுறை….

கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் காலைக் கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் பெறலாம் என்பது ஐதீகம்
 
Top