ஒரு இரத்தப் பரிசோதனை செய்தாலே போதும், ஒரு நபர் இறக்கும் நேரத்தை சொல்லிவிட முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா?. அது சாத்தியமாகும் என்கிறது சமீபத்திய டிஎன்ஏ ஆராய்ச்சி.

குரோமோசோம்.. டெலோமீர்

நமது செல்களில் உள்ள ஜீன்கள் தான் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. இதில் அடங்கியுள்ள தகவல்கள் தான் நமது பிறப்பு, உடல், உடல் நிலை, இறப்பை (விபத்துக்களால் உயிர் போவது தனிக்கதை) தீர்மானிக்கின்றன. இந்த ஜீன்களில் அடங்கியவை தான் குரோமோசோம்கள். மனித செல்களில் 23 ஜோடி குரோமோசோம்கள் உண்டு. இந்த குரோமோசோம்களை ஒரு குழாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதன் இரு முனைகளிலும் உள்ள மூடி தான் டெலோமீர் (telomeres) எனப்படும் சமாச்சாரம்.

டெலொமீரின் வேலை..

இந்த டெலோமீரின் முக்கிய வேலை, இரு குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்று நுனியில் ஒட்டிவிடாமல் தடுப்பது. அவ்வாறு ஒட்டிவிடும்போது தான் உடல் குறைபாடுகளுடன் சந்ததிகள் பிறப்பது போன்றவை நடக்கின்றன. மேலும் செல்கள் இரண்டாகப் பிரியும்போது குரோமோசோம்களும் பிரியும். அவ்வாறு பிரியும்போது குரோமோசோம்களின் நீளம் குறையாமல் பார்த்துக் கொள்வதும் டெலோமீரின் வேலை. அதே நேரத்தில் குரோமோசோம்கள் ஒவ்வொரு முறையும் இரண்டாகப் பிரியும்போதும் இந்த டெலோமீர்களின் நீளம் குறைந்து கொண்டே வரும்.

பறவையில் நடந்த ஆராய்ச்சி...

இதை அடிப்படையாக வைத்து இந்தியப் பெருங்கடலில் உள்ள ஷெசல்ஸ் நாட்டுக்கு அருகே Cousin Island என்ற தீவில் வசிக்கும் warbler ரக பறவைகளில் ஒரு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பறவைகளின் குரோமோசோம்களை ஆய்வு செய்ததில், அதில் எந்தப் பறவையின் டெலோமீரின் நீளம் மிக மிகக் குறைவாக இருந்ததோ அது விரைவில் இறந்து போவது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் நார்விச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ரிட்சர்சன் தலைமையிலான டீம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது.


டெலோமீரின் நீளம் தான் எமனின் தூக்குக் கயிறின் நீளம்?:

வழக்கமாக ஷெசல்ஸ் நாட்டு வார்ப்ளர் பறவைகள் 6 ஆண்டுகள் உயிர் வாழும். ஆனால், சில 17 ஆண்டுகள் கூட உயிர் வாழ்வதுண்டு. இந்தப் பறவைகளின் டெலோமீர்களை ஆராய்ந்ததில் அவற்றின் நீளம் குறையக் குறையக் பறவைகளின் வாழ்நாளும் குறைந்தே கொண்டே வருவது நீண்ட ஆராய்ச்சியில் உறுதியாகியுள்ளது.

அதாவது வயது ஆக ஆக டெலோமீர்கள் சேதமடைவதும், இதன் தொடர்ச்சியாக குரோமோசோம்களும் சேதமடைந்து இறுதியில் டிஎன்ஏக்களே சேதமடைவதும் இந்த ஆராய்ச்சிகளில் மீண்டும் தெளிவாகியுள்ளது.
 
Top