மணிப்பூர் மாநிலம், தமென்லாங் மாவட்டம், மலைகள் சூழ்ந்த பகுதி. அசாம், நாகாலாந்து மாநிலங்களை ஒட்டி உள்ளது. இந்த மாவட்டத்தை, மாநில தலைநகரான, இம்பாலுடன் இணைப்பதற்கு, ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது.இந்த சாலை, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது என்பதால், குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இந்தச் சாலையை, போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை கைவிட்டு விட்டனர். மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கும், இந்த சாலையை தவிர, வேறு சாலை வசதி இல்லை.
பல ஆண்டுகளாக, போராட்டம் நடத்தியும், புதிய சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமென்லாங் மாவட் டத்தை சேர்ந்த, ஆம்ஸ்ட்ராங் பாமெய் என்பவர், தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, பணிபுரிந்து வருகிறார்.இவருடைய முயற்சி காரணமாக, தமென்லாங் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான சாலை வசதியை, தாங்களே அமைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 40 கி.மீ., நீளத்துக்கு, இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது.
புதிய சாலைக்கான வழித் தடங்களில், பல இடங்களில், மலைகள் குறுக்கிடுவதால், சாலை அமைக்கும் பணி, மிகவும் கடினமாக இருப்பதால், மிகவும் மெதுவாகவே பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது:நான், பிறந்து வளர்ந்தது, இந்த மாவட்டத்தில் தான். சாலை வசதி இல்லாததால், மக்கள் படும் சிரமங்களை, அனுபவித்து உணர்ந்தவன் நான். இதனால், அரசை எதிர்பார்க்காமல், நாங்களே சாலை அமைக்கும் பணியை துவக்கினோம். இதற்காக, வீடு வீடாகச் சென்று, நிதி திரட்டுகிறோம். அறக்கட்டளை அமைப்புகளிடமும், உதவி கோரியுள்ளோம். என்றாவது ஒருநாள், எங்களின் திட்டம், அரசின் கவனத்துக்கு வரும்; அப்போது, அரசு எங்களுக்கு உதவி செய்யும் என்ற, நம்பிக்கை உள்ளது. தினமும், 250 பேர், சாலைப் பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு, ஒரு கிராமம் என்ற அடிப்படையில், சாலைப் பணிகளில், மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவ்வாறு ஆம்ஸ்ட்ராங் கூறினார்.