ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த ஆஸ்திரேலியா ஆட்டை, 18 ஆயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரி வாங்கி சென்றார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி உட்பட மலைக்கிராமங்களில், கிராம மக்கள் அதிகளவு ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.கொடி ஆடு, கன்னி ஆடு, கறுப்பு பண்ணை ஆடு, பார்பாரி, மோளை ஆடு, கறுப்பு வங்காளம் ஆடு, தலைசேரி, சூர்த்தி, மார்வாரி, உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளை வளர்த்து, முக்கிய பண்டிகை காலங்களில் விற்பனை செய்கின்றனர்.சமீப காலமாக, அதிக இறைச்சி தரும் புதிய ரக ஆடுகளை வளர்க்க, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓசூர் அருகே, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் உள்ளதால், இப்பகுதியில் நடக்கும் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில், விற்பனைக்கு வருவது வழக்கம்.

தற்போது, இறைச்சி ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை, "கிடுகிடு' வென உயர்ந்து வருகிறது.நேற்று, ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் ஆட்டு சந்தை நடைபெற்றது. வழக்கமாக, 2,500 ஆடுகள் வரை விற்பனைக்கு வரும் சந்தையில், நேற்று, 1,010 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.

உத்தனப்பள்ளியை சேர்ந்த விவசாயி மாரப்பா என்பவர் கொண்டு வந்த, ஆஸ்திரேலியா இன ஆட்டை, வியாபாரிகள் போட்டி போட்டு வாங்க முன் வந்தனர்.மற்ற ஆடுகளை விட, இந்த ஆடு கால்கள் மற்றும் காதுகள் பெரிதாக இருந்தன. 40 முதல், 50 கிலோ வரை எடை உள்ளது என்று கூறப்பட்டது.

இறைச்சி ருசியாக இருப்பதோடு, தினமும், மூன்று லிட்டர் வரை பால் கொடுக்கும் என, அதை பராமரிக்கும்விவசாயி, தெரிவித்தார். இந்த ஆட்டை, 18 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.சோகன் கூறியதாவது:ஓசூர் பகுதியில் உள்ள தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக, சமீப காலமாக விவசாயிகள் வெளி நாட்டு ஆடுகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இங்கு, லண்டனை சேர்ந்த, டார்ச்சர், டவுன் ரக ஆடுகள், கூட வளர்க்கப்படுகின்றன. சிறப்பு ரக ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
 
Top