பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதம் தங்க நேர்ந்தது. அதற்குள் என் கணவர், இரண்டுமுறை என்னை வந்து பார்த்துச் சென்றார். வரும்போதேல்லாம் ஆபீஸ் விஷயம் மட்டுமின்றி, நான் இல்லாதபோது வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்வார்.

ஒரு மாதம் முடிந்து வீட்டிற்கு சென்றேன். அவசரத் தேவை என்றால் கூட கதவை சாத்திக் கொள்ளும் பக்கத்து வீட்டுப் பெண்மணி, தானாக வந்து பேசினார். "நீங்கள் இல்லாத போது அலுவலகம் செல்லும் உங்கள் கணவர், இரவில், நேரத்துக்கு வீடு திரும்புவதில்லை. இருமுறை, வீட்டிற்கு இரவு வரவேயில்லை. காலையில் தான் வந்தார்...' என்றாள்.

"நீ இல்லாதபோது, வீட்டிற்கு வர பிடிக்கவில்லை. எனவே, ஓவர்டைம் பார்த்துவிட்டு அதிகாலை 3:00 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தேன்...' என்று, என் கணவர் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதற்கேற்றார்போல், அந்த மாத சம்பளமும் அதிகம் கிடைத்தது.

அதனால், அந்த பெண்மணி கூறியதை பொருட்படுத்தவில்லை நான். கணவன் - மனைவியிடையே ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தால், பிறர் பேச்சை கேட்டு, வீண் சந்தேகம் மற்றும் சண்டை வராமல் தடுக்கலாம்.
 
Top