ஜி.பி.எஸ்., கருவி: காலை, மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலால், பெரும்பாலான பயணிகள், இறங்க வேண்டிய இடத்தை தவற விடுகின்றனர். நாள்தோறும், பேருந்துகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க, பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள, "டிவி'யில், பயணிகள் இறங்க வேண்டிய இடம் குறித்து, முன்னரே தெரிவிக்கும், ஜி.பி.எஸ்., வசதியை, கடந்த, 22ம் தேதி முதல், போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை மாநகரின், "ஏசி' பேருந்துகளில், ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தும் பணி துவங்கி உள்ளது. பேருந்துகள், அடுத்து நிற்கும் நிறுத்தத்தின் தகவல்களோடு, வானிலை அறிவிப்பும், "டிவி'யில் வெளியாகும்.
விவரங்கள்: பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்படும், "டிவி'யில், திரைப்பட பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகளும், சென்னையை சுற்றியுள்ள சுற்றுலா மற்றும் திருத்தலங்கள் பற்றிய விவரங்களும் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சாதாரண, விரைவு, தாழ்தள சொகுசு, தொடர் மற்றும் வால்வோ குளிர்சாதன பேருந்து என, பல வகையான பேருந்துகளை இயக்குகிறது. மாநகரின், 748 வழித்தடங்களில், 3,497க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. முதல் கட்டமாக, "ஏசி' பேருந்துகளில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் திட்டத்தை துவங்கி உள்ளோம். தற்போது, பரிசோதனை முறையில், தாம்பரம் - பிராட்வே (21ஜி) வழித்தடத்தில், ஓடும் பேருந்தில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறம்,"32' அங்குலம் கொண்ட, எல்.இ.டி., "டிவி' பொருத்தப்பட்டுள்ளது. அதில், பேருந்து எந்த பகுதியில் சென்று கொண்டுள்ளது, அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து, அடுத்து நிறுத்தத்துக்கு, 150 மீட்டருக்கு முன்னரே திரையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவிக்கப்படும். தகவல் மற்றும் பொழுது போக்கு நிறைந்த, பயணமாக அமையும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, பேருந்தில் உள்ள, "டிவி' செயற்கைக்கோளுடன் இணைக்கப்படுகிறது. இப்பணியை தனியார் நிறுவனம் செய்கிறது. இதற்கென, நுங்கம்பாக்கத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற பேருந்துகளிலும் இவ்வசதி விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துரையிடுக Facebook Disqus