0

         இந்தி சினிமாவில் வழமையான வர்த்தக ரீதியான (மசாலாப்) படங்களைத் தாண்டிய மாற்று சினிமாக்கள் சத்தமில்லாமல் ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டுவருகின்றன.

தமிழில் எப்போதாவதுதான் பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், வெயில் போன்ற முயற்சிகள். ஆனால் இந்தியில் எங்களுக்குத் தெரியாமலேயே தொடர்ந்து வெளிவருகின்றன. அதற்குக் காரணம் இவ்வாறான படங்களுக்கு, மசாலா படங்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், வரவேற்பு இல்லாமையாக இருக்கலாம்.

ஆனாலும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் எடுக்கப் படும் இப்படங்கள் அதிகளவிலான பார்வையாளர்களைக் கொண்ட இந்தி சினிமாவில் வியாபார ரீதியாக தோல்வியடைய சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுவும், இம்மாதிரியான முயற்சிகள் தொடர ஒரு காரணமாக இருக்கலாம். தமிழில் அப்படி அல்ல.


இந்தியின் வர்த்தக ரீதியான படங்களில், வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர் அமீர்கான். அவரது இயக்கத்தில் வெளியான முதலாவது படம் இது. அவருக்குள் இருக்கும் இன்னொரு புதிய ஆளுமையைக் கண்டு பிரமிக்க வைக்கிறது. புதிய கதைக்களம், சலிப்புத் தட்டாத தொய்வில்லாத திரைக்கதையமைப்பு,முதல் முயற்சியிலேயே அத்தனை விருதுகளுக்கும் தகுதியான ஒரு படைப்பைத் தந்திருக்கிறார்.

அதுவும் ஒரு பெரிய நடிகர் தனது சொந்தப்படத்தில் தன்னை முன்னிலைப் படுத்தாமல், ஒரு சிறுவனை ஹீரோவாக்கி, தான் ஒரு சாதாரண வேடத்தில்...நம்ம தமிழ் சினிமாவில எந்தக் காலத்தில்தான் நடக்குமோ?

ஆனால் அமிர்கானின் லகான், 3 idiots அளவுக்கு மக்களிடையே வரவேற்பைப் பெற்றதா எனத் தெரியவில்லை. (படத்தின் DVD யைப் பெற்றுக் கொள்ள அலைந்ததை வைத்து சொல்கிறேன்)


வசதியான குடும்பத்தில் தந்தை, அம்மா, அண்ணனுடன் எட்டு வயதுச் சிறுவன் இஷான். இஷானால் எழுத்துக்களை வேறு பிரித்தறியவோ, நினைவில் கொள்ளவோ,வாசிக்கவோ முடிவதில்லை. ஒரு பந்தை ஒழுங்காக எறிய முடிவதில்லை. எழுத்துக்கள் எல்லாம் இடம் மாறுகின்றன. மாயத் தோற்றங்களாகத் தெரிகின்றன. பிறகு எழுதுவது? பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிக மோசமான மதிப்பெண்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவன் ஒரு இயல்பான, துடிப்பு மிக்க, குறும்புத்தனமான பையன்.


          பள்ளியில் அவனைத் தொடர்ந்து அடுத்த வருடம் படிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறுகிறார்கள். அவன் தனது விளையாட்டுத் தனத்தால் தான் படிக்காமல் இருப்பதாகவும், அவனுக்கு அளவுக்கு மீறி செல்லங்கொடுத்து இப்படியாகி விட்டதாக நினைக்கும் தந்தை, அவனைத் தனியாக வேறொரு ஊரிலிருக்கும் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். அங்கேயே ஆசிரியர்களின் கண்காணிப்பில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்பதால் அவனது நிலையில் நிச்சயம் மாற்றம் வரும் என நம்புகிறார்.

                அவனோ தன்னை அனுப்ப வேண்டாமென்றும் தான் இனி ஒழுங்காகப் படிப்பேன் என்றும் கூறிக் கெஞ்சுகிறான். அழுகிறான். அவன் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் அந்தத் தாயும் தந்தையும் அவனின் நன்மையைக் கருத்தில் கொண்டு தங்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனை அந்தப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இஷான் இரவு முழுவதும்  அழுது கொண்டே இருக்கிறான்.


                   அவனால் அங்கு, முற்றிலும் புதிய சூழ்நிலையில் ஒன்ற முடியவில்லை. தாய்,தந்தை மேல் உள்ள கோபம், தனது இயலாமை காரணமாக தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். யார் பேச்சும்கேட்காமல் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் இருக்கிறான். வார விடுமுறையில் தனது குடும்பத்தினர் பார்க்க வரும்போது மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறான்.

                  வகுப்பறையில் அவனது இயலாமையை புரிந்து கொள்ளாமல், ஆசிரியர்களால் தண்டிக்கப் படுகிறான். கிண்டலடிக்கபடுகிறான், சக மாணவ னான கால் ஊனமுற்ற ஒருவன் மட்டும் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். இஷானும் அவனுடன் மட்டுமே கதைக்கிறான். வேறு யாருடனும் கதைப்பதில்லை. ஆசிரியர்கள் உட்பட. வகுப்பு தவிர்ந்த நேரங்களில் தனிமை.


                   இந்நிலையில் பள்ளிக்கு புதிய தற்காலிக ஓவிய ஆசிரியராக வருகிறார் நிகும்ப். (அமீர்கான்). கலகலப்பான இளைஞரான அவர் தனது அணுகுமுறையால் எல்லாச் சிறுவர்களையும் எளிதாக உடனேயே கவர்ந்து விடுகிறார். இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார்.

                   அவன் விடும் பிழைகளின் ஒழுங்கை வைத்து அவனுக்கு கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதை கண்டறிகிறார். அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளை கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவிக்க வேண்டுமென்பதை உணர்ந்து, அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கிறார். அங்கு அவன் வரைந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் திறனைக் கண்டு கொள்கிறார்.


                ஒரு நாள் வகுப்பறையில் Dyslexia குறைபாட்டுக்கான அறிகுறிகளான தோற்றப் பிறழ்வுகளை விவரித்துக் கொண்டு செல்ல ஏனைய மாணவர்கள் அதனை நகைச்சுவையாக எண்ணி சிரிக்க, அவன் மட்டும் அதிர்ச்சியடைகிறான். சொல்லிவிட்டு இறுதியில் இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு அவன் யார்? என்று கேட்க, அவன் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். அவர் உடனே ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க, வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக் பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார்.

இறுதியாக எல்லா மாணவர்களையும் அனுப்பி விட்டு, இஷானிடம் தனியாக 'இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை' என, மீண்டும் இஷான் திகைக்க 'அது நான்தான்' என்கிறார் நிகும்ப்.

                 அதன் பின் இஷான் நிகும்ப் உடன் நட்பாகி விடுகிறான். அவனுக்கு நம்பிக்கை பிறக்கிறது.அவரே அவனுக்கு தலைமை ஆசிரியர் அனுமதிபெற்று, எல்லாப் பாடங்களையும் கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது வாசிக்க, எழுத முடிகிறது. அதில் அவன் முழுதாக ஈடுபட வழிகாட்டுகிறார். அவனும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறான்.


                  பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப். அதில் அவனுக்கு முதலிடம் கிடைக்கிறது. பள்ளியின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம். பள்ளியே அவனைக் கொண்டாடுகிறது. விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர் அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச, ஆச்சரியப் படுகிறார்கள். பெரு மகிழ்ச்சியுடன் அவனை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனித் தூக்கிக் கொள்ள படம் நிறைவடைகிறது.


                   ஆசிரியர் அவனைப் பற்றி கதைக்கும்போது, ஒரு குறைபாடு என்பதை விளங்கிக் கொள்ளாது அவனின் தந்தை அவர்மேல் கோபப்பட்டு 'என் மகனை மெண்டல் எனக்கூறுகிறீர்களா? அவன் படிப்பில் அக்கறையின்றி இருக்கிறானே தவிர, மெண்டல் இல்லை' எனக் கூறும் காட்சி, சரியான புரிதலின்றிய ஒரு பாசமிக்க தந்தையின் மனக்குமுறல்.


சிறுவனின் பிடிவாதம் , கோபம், இயலாமை, சோகத்தை வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு, புதிய பள்ளியில் சேர்ந்த அன்று குடும்பத்தைப் பிரிந்து அவன் மனங்குமுறி அழும் காட்சிகள், மனதை உருகச்செய்யும் பாடல் வரிகள் (English subtitles), அமீர்கானின் அலட்டலில்லாத நடிப்பு எல்லாமே மிகச்சிறப்பானவை.

நிச்சயம் இது அமீர்கானின் master piece

இப்படத்தில் குறைந்தது ஒருகாட்சியிலாவது எம்மால் கலங்காதிருக்க  முடியுமாக இருந்தால்,
நாங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டியிருக்கும்.


கருத்துரையிடுக Disqus

 
Top