லஞ்சம் வாங்கிக் குவித்த மின் வாரிய ஊழியருக்கு மதுரை மாவட்ட
கலெக்டர் அன்ஷுல் மிஸ்ரா நூதன தண்டனை கொடுத்தார்.
மதுரை கலெக்டர் அன்ஷுல் மிஸ்ரா பதவிக்கு வந்தது முதல் சிறப்பாக செயல்பட்டு
வருகிறார்.
பேஸ்புக் பக்கம் மூலமும், இமெயில் மூலமும் மக்கள் குறைகளைக்
கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். மேலும் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று
மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வித்தியாசமான புகார் வந்தது. அதில்,
மின்வாரிய அலுவலகங்களுக்கு மின்சார குறைபாடுகள் தொடர்பான கோரிக்கை
மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த மனுக்கள் அனைத்தையும் மின்வாரிய
ஊழியர் ஒருவர் சேகரித்து எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களின்
வீடுகளுக்கு நேரடியாக சென்று குறைகளை நிறைவேற்றி வைப்பதாக கூறி
ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார். சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கலெக்டர் மிஸ்ரா. உடனே சம்பந்தப்பட்
மின்வாரிய ஊழியருக்கு ஓலை போனது. அவர் பதறி அடித்துக் கொண்டு கலெக்டரிடம்
வந்தார். அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார் கலெக்டர்.
அதில் அவர் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து வாங்கிய லஞ்சப்
பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய், எந்தெந்த வீட்டில் வாங்கினீர்களோ
அங்கு போய் கொடுத்து விட்டு வர வேண்டும். அதை எனக்கு தெரிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரித்தார் கலெக்டர்.
இதையடுத்து வீடு வீடாகப் போய் லஞ்சத்தைக் கொடுத்து விட்டு வந்தார் அந்த
மின்வாரிய ஊழியர். அதை கலெக்டர் அனுப்பிய பணியாளர்கள் கண்காணித்தனர்.
பின்னர் கலெக்டரிடம் திரும்பி விவரத்தைச் சொன்னார் மின்வாரிய ஊழியர்.
மேலும், தன்னை வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடும்படியும் கோரிக்கை
விடுத்தார்.
ஆனால் அதை ஏற்கவில்லை கலெக்டர். டிரான்ஸ்பரெல்லாம் கிடையாது. இங்கேயேதான்
பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்.
எதுக்கு வாங்கனும்.. ஏன் இப்படி அவமானப்படனும்...!
கருத்துரையிடுக Facebook Disqus