என் நண்பர் ஒருவர், அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன் பதவி காலத்தில், அலுவலகத்திற்கு தணிக்கைக்கு வரும் மேலதிகாரிகளை, "குளிப்பாட்ட' வேண்டிய கடமையும் (?), நிர்பந்தமும், உடன் பணியாற்றுவோரின் தொல்லைகளுக்கு பயந்தும், லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, வேறு வழி இல்லாமல் குறைந்த அளவில் லஞ்சமும் வாங்கியிருக்கிறார். இப்போது, அவருடைய ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகையைப் பெற, தினமும் அலுவலகத்திற்கும், வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

அங்கு புதிதாக பதவியேற்றுள்ள அதிகாரி, இவரிடம், "என்ன சார், உங்க சர்வீஸ் காலத்தில், மக்களை இப்படி கெடுத்து வெச்சுருக்கீங்க... வருபவனெல்லாம், அஞ்சு, பத்துக்கு மேல் லஞ்சம் தரமாட்டேன்கிறான்...' என்று சலித்துக் கொண்டிருக்கிறார்.

"பத்து வருஷமாகவே, இந்த ஊரில் இப்படித்தான் பழக்கம்... ' என்று கூறி சமாளித்திருக்கிறார் நண்பர். "என்ன சார், அன்றைக்கும், இன்றைக்கும் விலைவாசி அப்படியே வா இருக்கு? நூற்றுக்கணக்கில் வாங்கிய இந்த கை, இப்போது பத்தும், இருபதும் வாங்குவதற்கு கேவலமாக இருக்கிறது. வீட்டில் என் பெண்டாட்டியிடம், இந்த வெட்கக்கேட்டை சொன்னால், நம்ப மாட்டேங்கிறாள்...' என்று வருத்தமாக கூறியிருக்கிறார் அந்தப் புதிய அதிகாரி.
அரசு அதிகாரிகளே... சம்பளம், போனஸ், வருடத்திற்கு ஆறு மாதம் விடுமுறை, பயணப் படி, எல்.டி.சி.,

மருத்துவ செலவு என்று எத்தனை சலுகைகள் உங்களுக்கு கிடைக்கின்றன. இன்னும் ஏன் ஆலாய் பறக்கிறீர்கள்? உங்களை விட திறமைசாலிகள், குறைந்த சம்பளத்துடனும், சலுகையுடனும் தனியார் துறையில் பணியாற்றுவோர் லட்சோப லட்சம் பேர் உண்டு. லஞ்சம் வாங்குவதே தவறு! அதில் இப்படி குறைக் கூறி, நல்லவர்களையும் கெடுத்து, உங்கள் வேலைக்கு நீங்களே உலை வைத்து கொள்ளாதீர்கள்!
 
Top