கோவில்கள் இன்னும் கொஞ்சம் தூய்மையாக இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம், நம் எல்லார் மனதிலும் உண்டு. சில கோவில்கள், விதிவிலக்காக தூய்மையாக இருக்கின்றன என்பதை நிதர்சனமாகப் பார்த்த என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். சென்ற வாரம் திண்டுக்கல் அருகில், 8 கி.மீ., தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தோம். அங்கே, 800 ஆண்டு பழமை மிக்க அழகான சிற்பங்களுடன், ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள், சவுந்தரவல்லித் தாயாரின் கோவில் இருக்கிறது.

கோவிலையும், சிற்பங்களை யும் ரசித்தபின், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தோம். தீபம் காண்பித்து அர்ச்சகர் தட்டில் குங்குமத்துடன் வந்து, எல்லாரை யும், குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். எங்களுக்கு வேண்டி யதை எடுத்துக் கொண்டோம். பின்னர், அர்ச்சகரிடம் கேட்டேன். "இது என்ன புதுமையாக இருக்கிறது. எல்லாக் கோவில் களிலும் அர்ச்சகர்கள் தானே பிரசாதம் தருகின்றனர். இங்கு ஏன் அவரவர்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அர்ச்சகர், "எல்லா கோவில்களையும் பாருங்கள். நாங்கள் எடுத்துக் கொடுக்கும் விபூதியையும், குங்குமத்தையும் கொஞ்சம் உபயோகித்து விட்டு, மீதியை என்ன செய்வது என்று தெரியாமல், அருகே இருக்கிற தூண்களில் தூவி விட்டு போய் விடுகின்றனர். இங்கே, அவரவர் களுக்கு வேண்டியதை அவர்களே எடுத்துக் கொள்வதால் அனைத்து தூண்களும் சுத்தமாக இருக் கிறது...' என்றார். மற்ற அர்ச்சகர்களும், தாங்கள் பணிபுரியும் கோவில்களில் இதை செயல்படுத்த முன் வர வேண்டும்.
 
Top