அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த, அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனை பொங்குகிறது. காரணம், சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே எந்த அசைவு மில்லை. கைவிரல்களில் மட்டும் லேசான அசைவு உண்டு. அந்த லேசான அசைவுகளையும், கம்ப் யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் ஏராளமான நண்பர்களை பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளம் என்று சொல்லக்கூடிய ட்வீட்டர், பேஸ்புக், பிளாக்கைப் பயன் படுத்துவோருக்கு, "ஜகூ' என்ற வார்த்தை பிரபலம். "ஜகூ' என்ற வார்த்தைக்கு பின் இருப்பவர் தான் இக்கட்டுரை யின் நாயகன் கோவை ஜெகதீஷ். எல்லாரும்தான் எழுதுகின்றனர். ஆனால், ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது. வெட்டி அரட்டை எல்லாம் இல்லாமல், எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவிரமாகவும் விமர்சிக்கிறார்.
"இந்திய பொருளை வாங்கு, இந்தியனாக இரு...' என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார்.

தமிழின் மீதான அதீத காதலால், நள்ளிரவு நேரத்தில் கூட, தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு, "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். கோவையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணா விரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களின் அபிமானத்தையும் பெற்றவர். அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் என்று, மாணவர் அமைப்போடு அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப் போடும், உலகோடும் ஒரு பக்கம், "நான் ஒரு கப்பல் என்ஜீனியர்... எனக்கான புராஜக்டை முடிக்க முடிய வில்லை நீங்கள் உதவ முடியுமா?'என்று கேட்ட என்ஜீனியருக்கு, அவர் சொன்ன வேலையை முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஒரு பக்கம் என்று ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் போதவில்லை என்று மனதால் ஓடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம், இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்ப முடிகிறதா!
வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை.

வெங்கட்ரமணன் கிரிஜா தம்பதியரின் ஒரே மகனான ஜெகதீஷ், பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு. ஆனால், கண் திருஷ்டி பட்டது போல, நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. மூன்று வயதில், உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் பற்கள் சேதமடைந்தது. ஏழு வயதில் நிற்க வைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது. மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம், உயிரை விட்டுவிட்டு, உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது. இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது, கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது.

தந்தை தன் தொழிலை விட்டு விட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவரானார். ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து அவரின் குடும்பத்தைக் காத்து வருகிறது.
இந்நிலையில், ஜெகதீஷ் தன் ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனிமையை விரட்ட உருப்படியான தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இன்டர்நெட் உதவியுடன், கம்ப்யூட்டர் நன்கு கற்றவர்களுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில், தன் அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

யாராவது பார்க்க வருகின்றனர் என்றால், சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார். எங்காவது போவது என்றால், பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருகிறார். மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில், "இயர் போனை' செருகிக்கொண்டு, இடது கையின் நடுவிரலை அசைத்து, அசைத்தே, நம்மில் பலராலும் செய்ய முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார்.

இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், தான் கற்றதையும், பெற்றதையும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து, "நீ மாற்றுத் திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி...' என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.

இவரிடம் கம்ப்யூட்டர் திறமையும், தமிழில் வளமான அறிவும், எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவும் இருக்கிறது.

"என்னிடம் இல்லாதது, நிரந்தர வருமானம். என் பெற்றோரின் மனதிலும், கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன். அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன். இனி, "இவன் சுமையானவன் அல்ல, சுகமானவனே...' என, என்னைச் சார்ந்த அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும். அதற்காக, கடுமையாக உழைக்க தயராக இருக்கிறேன். என் தகுதிக்கேற்ப வேலை இருந்தால் சொல்லுங்கள்...' என்கிறார்.
"உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை, தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு கொள்வர்...' என்ற, நம்பிக்கையை அவருள் விதைத்து, விடைபெற்றேன்.
 
தொடர்புக்கு: 9791497906
 
Top