தெளிப்புநீரில் ஜிலுஜிலுக்கும் 50 ஏக்கர்!


ஐம்பது ஏக்கரில் விரிந்து கிடக்கும் அந்த தென்னந்--தோப்பினுள் நுழையும்போதே... உடல் சில்லிடுகிறது... ஏதேனும் வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்று! அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நுண்தெளிப்பு நீர்ப்பாசனமும்... பல்லடுக்கு சாகுபடியும்தான் இதற்கு காரணம்!

பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் கிளாமங்கலம் கிராமத்திலிருக்கும் இந்தப் பண்ணைக்குச் சொந்தக்காரர்... ஆடிட்டர் அய்யாவு. வருமானத்தை சரியாக கணக்குப் போட்டுப் பார்த்து, தென்னை, பாக்கு, மிளகு, ஜாதிக்காய், லவங்கம், சர்வ சுகந்தி, குடம்புளி... என லாபம் கொடுக்கும் பயிர்களாகவே சாகுபடி செய்து வருகிறார் இந்த ஆடிட்டர். அதனால்தான், சுற்றுப்புறத்தில் உள்ள விவசாயிகளுக்கெல்லாம்கூட பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது, அந்தப் பண்ணை.

40% செலவு... 60% லாபம் இருக்கணும்!
‘‘தோட்டத்துல இருந்து கிடைக்கிற மொத்த வருமானத்துல 40% மட்டும்தான், தோட்டத்துக்காக செலவாகணும். மீதியை லாபமா எடுக்கணும். அப்படி இல்லேனா... எங்கேயோ தப்பு நடக்குதுன்னு அர்த்தம். அதைக் கண்டுபிடிச்சு, சரி பண்ணணும். அப்பதான் விவசாயத்துல ஜெயிக்க முடியும்’’ என்று பேச்சைத் துவக்கினார், ‘ஆடிட்டர்’ அய்யாவு.

தென்னை, பாக்கு, மிளகு!

‘‘மணலும் செம்மண்ணும் கலந்த பூமி. அதனால, முழுக்க தென்னையை நடவு செஞ்சுட்டேன். இடையில பாக்கு இருக்கு. ஒவ்வொரு தென்னையிலும் நாலு மிளகுச் செடியை ஏத்தியிருக்கேன். இதுபோக லவங்கம், ஜாதிக்காய்... மாதிரி எல்லாம் கலந்து 650 மரங்கள் இருக்கு. பாலுக்காக 15 எருமை மாடு, 10 பசு மாடு இருக்குது. தோட்டத்துக்குத் தேவையான மண்புழு உரத்தை நாங்களே தயாரிச்சுக்குறோம். பண்ணையோட மேனேஜர் கணேசன், முப்பத்தஞ்சு வருஷமா இங்க இருக்கார். அவர்தான் முழு பண்ணையையும் கவனிச்சுட்டு வர்றார்.

தெளிப்பு நீரில் கூடுதல் மகசூல்!

ஆரம்பத்துல வாய்க்கால்லதான் தண்ணி விட்டோம். அதுல ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி விளைச்சல் இல்லை. மரங்களுக்கு சரியா தண்ணீரும் கிடைக்கலை. அதனால சொட்டு நீர்ப்பாசனம் அமைச்சேன். அதுல உப்பு அடைச்சுக்கிட்டு அடிக்கடி தண்ணி வராமப் போயிடும். அதோட இந்த எலிங்க, நைட்டோட நைட்டா குழாயையெல்லாம் கடிச்சுப் போட்டுட்டு போயிடும். ஆனாலும், வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர் முறையில விளைச்சல் கொஞ்சம் கூடுதலாத்தான் கிடைச்சது. அதுக்கப்பறம்தான் தெளிப்பு நீர்ப் பாசனம் பத்தி கேள்விப்பட்டு அதை அமைச்சேன்.

இந்த முறையில மரத்து மேலயும் தண்ணி படுறதால, மரத்தோட சூடு தணியுது. மண்ணுல சீரா தண்ணி படுறதால ஈரப்பதம் அப்படியே இருக்குது. அதனாலதான் தோப்பு இவ்வளவு குளிர்ச்சியா இருக்கு. அதோட பலனும் கண்கூடாத் தெரியுது. ஆரம்பத்துல ஒரு மரத்துல வருஷத்துக்கு 100 காய்தான் கிடைச்சுக்கிட்டுருந்தது. சொட்டுநீர் போட்டப்போ 120 காய் வரைக்கும் கிடைச்சது. இப்போ 200 காய் வரைக்கும் கிடைக்குது.....''
-பசுமை விகடன், 25-1-2011
 
Top