இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
கள்ளிப்பட்டு
என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில்
ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக
கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.
ஆசிரியர்
திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து
வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே
அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும்
மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய்
அவளைப் பார்த்து,
“யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.
“ஐயா,
என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம்
கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம்
கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
“ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”
ராமு
எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது
அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை
ஓட்டித்தள்ளிவிட்டனர்.
“ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”
“டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”
“ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”
என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.
பள்ளி
முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு
மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன்
அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று
கேட்டாள்.
“எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை
சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால
எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி
கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”
“நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”
“நான்
சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு
வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே
மாட்டேன்.”.
“சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே
உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று
குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று
சாமியிடம் முறையிட்டாள்.
ராமுவின் அப்பா அவன்
பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை
கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என்
புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என்
புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன்
இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி
வருகிறாள்.
ராமு தன் உயர் கல்விக்கு சென்னை
செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு
விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில்
விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை
நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க
ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள்.
இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால்
நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத்
தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும்.
ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு
ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன்
மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை
அனுப்புவாள்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக
அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ
என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது
கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை
கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு
மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது
உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில்
உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான்
அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி
அவளுக்குப் புத்துயிர் அளித்தது.
அவர் மூலம் அவன்
விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது
இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக்
கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து
விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில்
வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது
அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.
குழந்தைகளின்
அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ
பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது
உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க
இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா?
முதல வெளிய போ”, என்றான் ராமு.
“இத்தனை வருடங்கள்
கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா
என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை
எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.
சில
நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை
வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க
உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து
அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான்
அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய
ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே
என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.
“ராமு!
என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப்
பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து
உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு
தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக்
கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில்
உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என்
இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன்
கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது
மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும்.
ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன்
வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர்
வழிந்தது. மேலும் படித்தான்.
“அழாதே மகனே,
எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும்
கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”
இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.
வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.