சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்ரா கலைக்கூடத்திற்கு, நூலகர் மற்றும் உதவியாளராக பணிக்கு சென்ற ரேகா விஜயசங்கருக்கு, புகைப்படக்கலையின் மீது ஒரு கண். இதைப்புரிந்து கொண்ட கலைக்கூட நிர்வாகத்தினர், அவருக்கு கொடுத்த ஒத்துழைப்பு, செய்த உதவிகள் காரணமாக மளமளவென வளர்ந்த ரேகா, இப்போது, கலைக்கூடத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக உள்ளார்.
கலைக்கூடத்தின் சார்பில் வெளிவரும் அனைத்து புத்தகங்கள் மற்றும் வழிகாட்டிகளில் இவர் எடுத்த புகைப்படங்களே அலங்கரிக் கின்றன. இது போக மழை, அய்யனார், ஆடிப் பெருக்கு, கூடை, முகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் இவரது தனி நபர் புகைப்படக் கண்காட்சிகளும் நடந்துள்ளன. மேலும், சென்னையில், "ஆர்ட் சென்னை' நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு, ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றார். பரிசுபெற்ற இவரது புகைப்படம், வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமாய் அலங்கரித்துக்கொண்டு இருப்பதை அந்த பக்கம் போனால் பார்க்கலாம்.
இப்போது, "வேஷம்' என்ற தலைப்பில், தட்சிணசித்ராவில் புகைப்பட கண்காட்சியை நடத்தி வருகிறார். தட்சிணசித்ராவில் நடன நிகழ்ச்சி நடத்த வந்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநில கலைஞர்கள் தங்களது நடனத்தின் பொருட்டு முகத்தில் போட்டுக்கொண்ட வேஷங்களை மட்டும் தொகுத்து புகைப்படக் கண்காட்சியாக வைத்துள்ளார். இக்கண்காட்சியை, எழுத்தாளர் சித்ரா மாதவன் துவக்கி வைக்க, ஓவியர் கீதா ஒருங்கிணைத்துள்ளார்.
"அரங்கத்தில், ஐந்து பேர் இருந்தாலும், ஐயாயிரம் பேர் இருந்தாலும், எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் ஆடும் இக்கலைஞர்களின் அர்ப்பணிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக் கிறேன். அவர்களின் முகங்களில் மட்டும் தான் வேஷம்; அகங்களில் கிடையாது. வெள்ளை உள்ளம் கொண்ட இம்மனிதர்கள், மக்களை மகிழ்விக்கும் கலைக்காக, தங்களை அதிகப்படியாக வருத்திக் கொள்கின்றனர். அதை என் பார்வையில் வெளிப்படுத்தும் சின்ன முயற்சியே, இப்புகைப்படக் கண்காட்சி' என்று கூறுகிறார் ரேகா.