"நீடுழி வாழ்க' என்பது, ஒரு ஆசிச் சொல். நீடுழி என்றால் எவ்வளவு காலம்... கலியுகம் முடியும் வரையிலா அல்லது இவன் விரும்பும் வரையிலா ... நீண்ட நாள், நீண்ட காலம் என்று பொதுவாகச் சொல்லி விடலாம்.

இதையே,"சதமானம் பவதி' என்பர். இதற்கு பொருள் நூறு வயது வாழ வேண்டும் என்பது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டும் போதுமா...

அத்துடன் ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம்மூன்றையும் கடவுளிடம் வேண்டச் சொன்னார்கள். ஆரோக்கியமாக இருந்தால் பிறருக்கும், தனக்கும் எவ்வித தொந்தரவும் இருக்காது. கண் தெரியாமலும், காது கேட்காமலும் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல், எத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்... இவன் எப்போது போவான் என்று தான் வீட்டில் உள்ளோர் அலுத்துக் கொள்வர். "ஐயோ! நான் இப்படி அவதிப்படுகிறேனே... எமன் வரவில்லையே...' என்று, அந்த உயிரும் ஏங்கும். அதனால், ஆரோக்கியம் முக்கியமானது.

அடுத்தது சவுக்கியம்... எல்லாம் இருக்கிறது; தேவையானது கிடைக்கிறது; குறை எதுவுமில்லாத வாழ்க்கை. இது சவுக்கியத்துக்கான அடையாளம். தன் வேலைகளை தானே செய்து கொள்ளும்படியான உடல்நிலை, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய செல்வநிலை, பிறர் தயவில்லாமல் நாட்களைக் கழிக்கும் நிலைதான் சவுக்கியம். அது மட்டுமல்ல, இது உடம்புக்கு ஒத்துக் கொள்ளும், இது ஒத்துக் கொள்ளாது என்றில்லாமல், எதை சாப்பிட் டாலும் ஜீரணிக்கும் சக்தி, நல்ல தூக்கம், சுறுசுறுப்பு, இதெல்லாம் இருந்து விட்டால், நீடுழி வாழ்வதில் எந்தவித துன்பமும் இருக்காது.

ஆயுளுடன், ஆரோக்கியம், சவுக்கியம் என்ற இரண்டும் கூடவே இருந்துவிட்டால், சுகமாக இருந்துவிட்டுப் போய் விடலாம். "ஏதோ கடைசி வரையில் நன்றாகவே இருந்தார். யாருக்கும் எந்த உபத்திரவமுமில்லை. காலம் வந்தது போய் விட்டார்' என்பர். அதனால் தான் பட்டத்ரி, குருவாயூரப்பனிடம், "ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம்மூன்றையும் தனக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா பக்தர்களுக்கும் கொடு' என்று வேண்டிக் கொண்டார். பகவானும் ஆமோதித்தாராம். மனிதனுக்கு ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம்மூன்றுமே வேண்டும். ஏதாவது ஒன்று குறைந்தாலும், பிரயோஜனமில்லை.
 
Top