1.  எல்.சி.டி/எல்.இ.டி டிவி இப்படி ஏதாவது உங்க வீட்டில் இருந்தால், சாதாரண வேலைகளுக்கு டெஸ்க்டாப்/ மடிக்கணினி மானிட்டரையும், யூட்யூப் பார்க்கும்போது பெரிய எல்.சி.டி டி.வி மானிட்டரையும் பயன்படுத்தலாமே!

இப்போது நிறைய டிவி மாடல்களில் HDMI இன்புட் சேர்ந்தே வருவதால், டெஸ்க்டாப் பிசி/மடிக்கணினி வாங்கும்போது HDMI அவுட்புட் இருப்பதுபோல் வாங்கினால் படத்தை தெளிவாக பார்க்கலாம்.

வரும் ஜனவரி 1 விற்பனையில் எல்.சி.டி/எல்.இ.டி டி.வி வாங்க இருப்பவர்கள் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.

2.  இப்போது பலர் DTH இணைப்புகளுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

என் செட்டாப் பாக்சில் பென்டிரைவை பயன்படுத்தி ரெகார்ட் செய்துகொள்ளலாம் என்று தெரிந்தது.

அப்படி ரெகார்ட் ஆகிறதா என்று சோதனை செய்து பார்த்ததில் சொல்லியபடி ரெகார்ட் ஆனாலும், புதிய பிரச்சனை வந்தது.

செட்டாப் பாக்ஸ் உபயோகத்தில் இருக்கும்போது அதுவே ரொம்ப சூடாகிவிடுகிறது.  பென்டிரைவை அதனுடன் நேரடியாக இணைப்பதால், பென்டிரைவுக்கும் அந்த வெப்பம் பரவிவிடுகிறது.

பென்டிரைவுக்கு வாரண்டி காலம் முடியவில்லை என்றாலும், அதை இவ்வளவு சூடேற்றினால் சீக்கிரம் கெட்டுவிடும். அதிக சூடு எலக்ட்ரானிக்சுக்கு ஆகாது.


இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன்.  வழி கிடைத்தது.

ஒரு யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிள் வாங்கி, அதன் ஒரு முனையை செட்டாப் பாக்சின் யூ.எஸ்.பி போர்ட்டில் இணைத்து, அதன் மறு முனையில் பென்டிரைவை சொருகினேன். இப்போது பென்டிரைவ் முன்மாதிரி சூடாவதில்லை.

இப்படி செய்தால் பென்டிரைவுக்கு நல்ல ஆயுசு வரும்!


அந்த யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிள் நான் 35 ரூபாய்க்கு வாங்கியதாக ஞாபகம். உங்களுக்கு 50 ரூபாய்க்குள் கிடைக்கும் என நினைக்கிறேன்.  யூ. எஸ்.பி. 2.0 கேபிள் கேட்டால் விலை அதிகமாக இருக்கும். நான் வாங்கியது யூ.எஸ்.பி 1.1 கேபிள் என்று நினைக்கிறேன்.

இந்த வேலைக்கு அது போதும்.

3.  டெஸ்க்டாப் கணினியில் முன்புறம் யூ.எஸ்.பி போர்ட் இல்லாதவர்கள் பென்டிரைவை சொருக எழுந்து நின்று கணியை திருப்பி கஷ்டப்படவேண்டாம்.  இந்த யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிளை கணினியின் பின்புறத்தில் ஒரு முறை இணைத்துவிட்டு மறுமுனையை முன்பக்கம் இழுத்துவிட்டுவிட்டால்  பென்டிரைவை முன்பக்கமாகவே எளிதாக சொருகிக்கொள்ளலாம்.


நிறைய பிரெளசிங் சென்டர்களில்  4 போர்ட் யூ.எஸ்.பி ஹப்பைதான் (4 Port USB Hub) இந்த வேலைக்கு பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். அந்த ஹப்பின் கேபிள் நீளம் குட்டையாகத்தான் இருக்கும்.  அதனால் பிரச்சனை முழுதாக தீராது.  யூ.எஸ்.பி எக்ஸ்டென்ஷன் கேபிள்தான் சரி.

கீபோர்ட் / மெளஸ் வாங்கும்போது அதற்கு யூ.எஸ்.பி கனெக்ஷன் இருப்பதுபோல் வாங்கிவிட்டால் அவற்றை டெஸ்க்டாப் கேபினட்டில் இருந்து இரட்டை தூரத்திற்கு நீட்டி பயன்படுத்திக்கொள்ள இந்த எக்ஸ்டென்ஷன் கேபிள் உதவும்.
 
Top