BPA என்பது bisphenol A எனப்படும் வேதிப்பொருள்ஆகும். இந்த வேதிப்பொருளைக் கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன.

BPA bottle மனித உடலில் மிகுதியாகச் சேரும் BPA இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தவல்லது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவோரின் சிறுநீரில் BPA ன் அளவு 69 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுகளை Harvard School of Public Health (HSPH) ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். பாலிகார்பனேட் பாட்டில்களை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பாட்டில்களுக்கு மறுசுழற்சி எண் 7 தரப்பட்டுள்ளது. மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

BPA நஞ்சு உடலில் சேருவதால் பாலுணர்வு மழுங்குதல், பால்சுரப்பிகளில் மாற்றங்கள், விந்து உற்பத்திகுறைதல் ஆகிய குறைபாடுகள் தோன்றுகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த பாட்டில்களை பயன்படுத்துவதைவிட சூடான பாட்டில்களை பயன்படுத்தும்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கின்றன. HSPH ஐச் சேர்ந்த ஜென்னி கார்வில் என்னும் ஆராய்ச்சி மாணவர் ஏப்ரல் 2008ல் 77 மாணவர்களை இதுசம்பந்தமான ஆய்விற்கு உட்படுத்தினார். இந்த மாணவர்களுக்கு ஏழுநாட்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் குடிப்பதற்கான பானங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சிறுநீரில் BPA ன் அளவும் சோதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு இரண்டு பாலிகார்பனேட் பாட்டில்களில் பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்விற்கு உட்பட்டவர்களின் சிறுநீரை மீண்டும் சோதித்தபோது BPAன் அளவு 69 சதவீதம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது.

2008 ஆம் ஆண்டு கனடாவில் குழந்தைகளுக்கான பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டது. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர். இந்த ஆய்வு இன்னும் தொடரப்படவேண்டும் என்றும் BPA ன் தாக்கத்தால் ஏற்படும் மார்பக புற்றுநோய், இனப்பெருக்கக் குறைபாடு இவற்றை ஆராயவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
Top