பினோபார்ப்பிடோன் (Phenobarnitone) அல்லது லூமினால் (Luminal) போன்ற நீண்ட நேரச் செயல்பாடு விளைவிக்கும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் (Barbiturates) ஆறுமுதல் பத்து மணி நேரத்திறன் கொண்டுள்ளன. தொடர்ந்து பயன்படுத்துபவர்க்கு அடுத்தநாளில் மந்தமான மன நிலையையும், உறங்கி வழிகிற நிலையையும் அவை உண்டாக்கலாம். இடை நிலையில் செயல்படும் மருந்துச் சரக்குகள், பூட்டோபர்பிடோன் (Butobarbitone), சொனாரில் (Soneryl), அமிலோபார்பிடோஸ் (Amylobarbitone) அல்லது அமிடால் (Amytal) போன்றவை ஐந்து முதல் ஆறுமணியே செய்கை புரியும்.
பென்டோபார்பிடோன் (Pentonarbitone) அல்லது நெம்பூடல்(Nembutal) போன்ற குறுகிய காலத்தில் செயல்படுத்தும் மருந்துகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே பயன்படும். கடுந்தீவிரமான குறை காலமுடையவை (Ultra-Short drugs) தியோபென்டோன் (Thiopentone) அல்லது பென்டோதால் (Pentothal) போன்றவை மயக்கமூட்டுவதற்கு முன்பாகக் கொடுக்கப்படுகின்றன. தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் கடுந்தீங்குகளை விளைவிக்குமாதலால் கட்டாயமாக மருத்துவர் மேற்பார்வையில் மட்டுமே இது உட்கொள்ளத்தக்கது.