தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும்.



இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம்.

எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.

நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம்.

இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும்.

நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.

நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும்.

இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது. ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது.

இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது.

இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது. இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம்.

அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும்.

எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம்.

ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
 
Top