நமக்கு ஏற்படக்கூடிய சோர்வுக்கு, நமது சிந்தனைகளும் மனப்பாங்கும் ஓரளவு காரணமாக இருக்கலாம். ஆனால் அதேசமயத்தில், நாம் உட் கொள்ளும் உணவையும் கவனிக்க வேண்டும். நமது சோர்வுக்கு நாம் புசிக்கும் உணவே முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த உண்மை நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. 

நமது குணங்கள் வேளைக்கு வேளை மாறுவதற்குக் காரணம் புலப்படுவதில்லை. குணங்கள் மாறும் நிலைகளை நமது ரத்தத்தில் அடங்கியுள்ள சர்க்கரையே ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் எப்போதும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை இருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட அளவு, நமது ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத தேவை.

இந்த அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? நாம் ஓய்ந்து போகிறோம். நமது இதயத் துடிப்புகளின் வேகம் அதிகரிக்கிறது. நமது முழங்கால்கள் விடுதலை பெற்று ஓடிவிடத் துடிப்பது போலத் தோன்றுகிறது. நமது மனம் குழம்புகிறது. 

காரணமின்றிக் கோபமடைகிறோம். பரபரப்பு ஏற்படுகிறது. வேலை செய்ய முடிவதில்லை. மறதி நம் மீது படையெடுக்கிறது. சிலசமயங்களில் மயக்கம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நமது ரத்தத்தின் சர்க்கரை ஓர் அதிசய ரசாயன விசைத் தொழிலகம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

இந்தச் சர்க்கரையே நம் உள்ளத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. ஏனெனில், சர்க்கரையில் உள்ள ஆற்றல் எனும் மந்திரவாதிதான் இந்த விந்தையைப் புரிகிறான். நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை, அற்புதங்களைப் புரிகிறது. நமது செயல்கள் அனைத்துக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் ஆற்றலே காரணம். 

ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் சர்க்கரைச் சத்து கிடைத்துக்கொண்டிருந்தால்தான் நமது மூளை, நரம்புகள் ஆகியவற்றின் உயிரணுக்கள் இயங்குகின்றன. சர்க்கரைச்சத்து போதுமான அளவு கிடைக்காவிட்டால் மேற்கூறிய உயிரணுக்கள் வேலைநிறுத்தம் செய்துவிடும். 

முன்னறிவிப்பு இன்றியே இந்த விபரீதம் ஏற்பட்டு விடும். நமது மத்திய நரம்பு மண்டலத்துக்கு ஆக்சிஜனைப் போலவே அவசரமாக சர்க்கரை தேவைப்படுகிறது. காரணம் என்ன? அந்த நரம்பு மண்டலத்தின் உயிரணுக்கள் சர்க்கரையின் உதவியின்றி ஆக்சிஜனை ஏற்க முடியாது. ரத்தத்தின் சர்க்கரை காரணமாகவே நமது இதயத் துடிப்புகள் பலமாக இருக்கின்றன. சர்க்கரையில் குளுக்கோஸ் ஒரு வகை. 

இந்தச் சர்க்கரையே நமது உடலில் ரசாயன மாறுதலை உருவாக்கி ரத்தத்தில் சேர்க்கிறது. நமது உடலில் உள்ள உயிரணுக்கள் அனைத்துக்கும் சர்க்கரையே அடிப்படை எரிபொருளாக அமைந்துள்ளது. இந்தச் சர்க்கரை குறைந்துவிட்டால், நமது உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அந்த நிலையில் தான் சோர்வும், சலிப்பும் தலைகாட்டுகின்றன. 

கடுமையான உடலுழைப்புக் காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம். எனினும் மூளைக்கும், மத்திய நரம்பு மண்டலத்துக்கும் முறைப்படி நாம் எரிபொருளை வழங்கத் தவறுதால் சோர்வு, சலிப்பு, எரிச்சல், தலைவலி ஆகியவை ஏற்படும். 

நமது ரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்ன? சர்க்கரைச் சத்து குறைவாக உள்ள உணவை உண்கிறோம் என்றுதானே நாம் பொதுவாக எண்ணுவோம். உண்மையில் சர்க்கரை நமது உணவில் அதிகளவு இருப்பதே இதற்குக் காரணம். 


இன்சுலின், ரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கும் முயற்சியில் அதிகமாகக் குறைத்துவிடுகிறது. எனவே நமது ரத்தத்தில் அளவுக்கு மீறி சர்க்கரை இருக்கக் கூடாது.

ரத்தத்துக்குத் தேவையான அளவே சர்க்கரை இருந்துகொண்டிருக்க வேண்டும். அதற்கு, கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து, குளுக்கோஸ் சர்க்கரை ஆகியவை குறைவாகவும், புரதச் சத்து அதிகமாகவும் உள்ள சீரான உணவை நாம் உட்கொள்ள வேண்டும்.
 
Top