0


உணவைத் தவிர்ப்பது என்பது இன்றைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு விஷயம். தட்டு நிறைய காய்,  கூட்டு, சாம்பார், சாதம்  வைத்து சாப்பிடவோ, டப்பாவில் அடைத்த உணவை எடுத்துச் சென்று சாப்பிடவோ இன்றைய இளம் வயதினருக்குப்  பொறுமை இருப்பதில்லை. ஆனாலும், பசிக்குமே... காஃபி ஷாப்புக்கோ, சாட் கார்னருக்கோ நண்பர்கள் சூழச் சென்று கொறிக்க நேரமில்லாத போது,  பசியை அடக்க அவர்கள் நாடுவது எனர்ஜி பார்ஸ் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ். கிட்டத்தட்ட சாக்லெட் பார் மாதிரியே இருக்கும் எனர்ஜி பாரையோ,  குளிர்பானம் போன்ற எனர்ஜி ட்ரிங்க்கையோ குடித்தால் நிறைவது அவர்களது வயிறு மட்டுமல்ல... மனதும்தான்! 

‘‘பெயருக்கேற்றபடி இவை உடனடி எனர்ஜியை கொடுத்தாலும், ஆரோக்கியத்துக்கு எந்தவித உத்தரவாதமும் தராதவை... தொடர்ந்து எடுத்துக்  கொள்கிறவர்களுக்கு பாதிப்புகளையே தரும்’’ என்கிற குழந்தைகள் நல மருத்துவர் விஜயகுமார், அவை பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

அதென்ன எனர்ஜி பார்?

எனர்ஜி பார் என்பது சப்ளிமென்ட் உணவு. பலவித தானியங்கள், ட்ரை  ஃப்ரூட்ஸ், நட்ஸ், எண்ணெய் வித்துக்கள், தேன், ஃப்ரக்டோஸ் அதிகமுள்ள  கார்ன் மற்றும் இதர சிரப்புகள் சேர்த்துத் தயாரிக்கப் படுபவை. இவற்றில் கொழுப்பு, இனிப்பு, கார்போஹைட்ரேட், கலோரி, வைட்டமின் என எல்லாமே  தூக்கலாக இருக்கும். வெவ்வேறு விதமான சுவைகளில், கலோரி அளவுகளில், கலவை முறைகளில் விற்பனைக்கு வருகின்றன. விளையாட்டு  வீரர்களுக்கு ஊட்டம் தருவதாக, ஆற்றலையும் புத்திக்கூர்மையையும் அதிகரிப்பதாக, கவனிக்கும் திறனைக் கூட்டுவதாக, உடற்பயிற்சிக்குப் பிறகு  களைத்துப் போனவர்களுக்கு சக்தி அளிப்பதாக, எடைக் குறைப்புக்கு உதவுவதாக, உணவின் மூலம் கிடைக்காத சத்துக்களை உள்ளடக்கியதாக,  உணவுக்கு மாற்றாக... இப்படிப் பல வகைகளில் உதவுவதாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. உடனடி ஆற்றல் தேவைப்படுகிற விளையாட்டு வீரர்கள்  முதல், ஜிம் செல்கிறவர்கள், உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள், உணவு உண்ணவே நேரமில்லாதவர்கள் என ஒவ்வொருவரின் தேவைகளையும்  பூர்த்தி செய்கிறபடியும் பல வகைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

எல்லா எனர்ஜி பார்களும் ஒரே மாதிரியானவை அல்ல. சிலதில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். சிலதில் புரதச் சத்து.  மூளையைத் தூண்டும்  பாரில் ஒரு விதமான சத்துக் கலவையும் எடைக் குறைப்புக்கு ஒருவிதக் கலவையும் உணவுக்குப் பதிலான பாரில் வேறு மாதிரியான கலவையும்  இருக்கும். இதுவே எப்படிப்பட்ட தேவை உள்ளவரையும் தேடிப்பிடித்து சாப்பிட வைக்கும். குழந்தைகளுக்கான எனர்ஜி பார்கள் சாக்லெட், கேரமல்  உள்ளிட்ட அதிகபட்ச கலோரி கொண்ட பொருட்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றன. அதிக இனிப்பு சேர்த்தவை என்பதால், குழந்தைகளுக்கு  இவை அதிகம் பிடிக்கும். அதே இனிப்புதான், அவர்களுக்கு உடல் பருமன் பிரச்னையையும் வரவழைத்துக் கொடுக்கும். எனவே சத்தானதுதானே,  எதையோ சாப்பிட்டால் சரி என்கிற நினைப்பில் குழந்தைகளுக்கு எனர்ஜி பார்களை அதிகம் கொடுப்பதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். தீவிர  விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிற பிள்ளைகள் எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி, வீட்டுச் சாப்பாட்டில் கிடைக்கக் கூடிய  புரதத்துக்கும், சத்துக்களுக்கும் எந்த வெளி உணவும் ஈடாகாது.

பெரியவர்களுக்கும் இதே விதிதான். தீவிர உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நீண்ட தூரம் ஓட்டப்பயிற்சி செய்கிறவர்களுக்கு, இவை  ஓரளவு உதவும். யாராக இருந்தாலும் உணவுக்கு மாற்றாக, இத்தகைய எனர்ஜி பார்களை எடுத்துக் கொள்வது தவறு. உணவின் மூலம் கிடைக்கிற  சத்துக்களே முழுமையானவை.  எடை குறைக்கிற முயற்சியில் இருப்போரும், அந்த நோக்கத்துக்காக விற்பனைக்கு வருகிற எனர்ஜி பார்களை அடிக்கடி  எடுத்துக் கொள்வது ஆபத்து. ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக உடற்பயிற்சி செய்கிறவர்கள், விளையாடுபவர்களுக்கு எல்லாம் இது உகந்ததல்ல.  உபயோகிப்பதற்கு முன், பாக்கெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள சத்துப் பட்டியல், தயாரிப்புப் பொருட்கள், அவற்றின் சுவை மற்றும் வெறும் வயிற்றில்  அவற்றை எடுத்துக் கொண்ட பிறகு எத்தனை மணி நேரத்துக்கு பசியின்றி வைக்கும் என்கிற தகவல்களை கவனமாகப் பார்க்க வேண்டும்.

எனர்ஜி ட்ரிங்க்உடலுக்கும், மூளைக்கும் உடனடி புத்துணர்வைக் கொடுப்பதாக விளம்பரப்படுத்தப் படுவதாலேயே எனர்ஜி பானங்களுக்கும் எக்கச்சக்க  வரவேற்பு. அவற்றில் கலக்கப்படுகிற கஃபைன் மற்றும் சர்க்கரை இரண்டும் தான் இத்தனைக்கும் பின்னணி. எனர்ஜிக்கு உத்தரவாதம் அளிப்பதாகச்  சொல்லப்படுகிற இந்த பானங்கள், உண்மையில் நன்மையை விட, பாதிப்புகளையே அதிகம் தருகின்றன. நடுநிலை நரம்பு மண்டலத்தைத் தூண்டி,  மூளையின் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகமாக்கி, ஒருவித புத்துணர்வைக் கொடுக்கும். காஃபி மற்றும் டீயில்  உள்ளதைவிட அதிகளவு கஃபைன் இருப்பதால், எனர்ஜி பானங்களைக் குடித்ததும் புத்துணர்வும் போதையும் கலந்த ஒரு உணர்வு உண்டாகும். அடுத்து  பொட்டாசியம் அளவு குறைந்து, மூளை வீக்கம் உண்டாகி, மூளையின் ரத்தக் குழாய்கள் வெடித்து, குறிப்பிட்ட பாகங்களுக்கு ரத்தம் போகாமல்,  பக்கவாதம் ஏற்படும் அபாயமும் நிகழலாம். அளவுக்கதிகமாகக் குடிப்பவர்களுக்கு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.

சாப்பிடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

எனர்ஜி பார் பாக்கெட்டின் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சத்து விவரங்களைப் பாருங்கள். அதில் சத்துக்கள் உள்ளனவா அல்லது வெறும் கலோரிகளை உள்ளடக்கியதா என்பது முக்கியம். உங்கள் தேவைக்கேற்ப அந்த பாரை தேர்ந்தெடுக்கவும். கார்போஹைட்ரேட்டா, புரதமா, கொழுப்பா... எது  அதிகளவில் உள்ளது எனப் பார்க்கவும். உதாரணத்துக்கு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறவர்கள், கொழுப்பைவிட, கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதையும்,  எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், புரதமும், நார்ச்சத்தும் அதிகமுள்ளதும்,  கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் குறைவாக உள்ளதையும்  தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து முழு தானியங்களால் செய்யப்பட்டதா எனப் பார்க்கவும். முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழ வகைகள், நட்ஸ் போன்றவை இருப்பது  சிறப்பு. அதிக இனிப்பு மற்றும் செயற்கை இனிப்பு, செயற்கை நிறம், சுவை மற்றும் ப்ரிசர்வேட்டிவ் சேர்த்தவற்றைத் தவிர்ப்பதே நல்லது. பாம் ஆயில்  கொண்டு தயாரிக்கப்பட்டதையும் தவிர்க்கவும். கஃபைன் மற்றும் மூலிகை சப்ளிமென்ட்டுகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் தவிர்க்கவும்.

சில வகை பார்கள், சுவையில் மிக மோசமாக இருக்கலாம். அவற்றையும் தவிர்க்கவும். எனர்ஜி பார் எடுத்துக் கொண்டதும் எத்தனை மணி நேரம்  உங்களுக்குப் பசியெடுக்காமல் இருக்கிறது எனப் பாருங்கள். நார்ச்சத்தும் கொழுப்பும் அதிகமுள்ள பார்கள் நீண்ட நேரத்துக்குப் பசி உணர்வைக்  கொடுக்காது.

எனர்ஜி ட்ரிங்க் மார்க்கெட்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரோலைட் ட்ரிங்குகள் கிடைக்கின்றன. அவற்றில் வெறும் கார்போஹைட்ரேட்டும்,  எலக்ட்ரோலைட்டும் மட்டுமே இருக்கும். அவை எனர்ஜி பானங்களில் இருந்து வேறுபட்டவை. எந்த பானமாக இருந்தாலும், அவற்றில்  சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். சில வகை பானங்களில் கஃபைனின் அளவு கூடுதலாக இருக்கும். சில  பானங்களில் அந்த அளவே குறிப்பிடப்பட்டிருக்காது. அவை உங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்பதால் நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாகரிகம் மாற, மாற, நம்முடைய உணவுப்பழக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

விளம்பரங்களைப் பார்த்து ஒரு புதிய உணவை முயற்சி செய்ய ஆசைப்படுவதற்கு முன், அது நமக்குத் தேவைதானா, அதனால் கிடைக்கக் கூடிய  நன்மை, தீமைகள் என்னென்ன, அவற்றில் சேர்க்கப்படுகிற பொருட்கள் மற்றும் அவற்றின் பின்னணி போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது  முக்கியம். உடல் நலம் சரியில்லாமல் மருந்துக் கடைகளில் நாமாக மருந்துகள் வாங்கி சாப்பிடுவது எவ்வளவு தவறானதோ, அதே போன்றதுதான்  செயற்கையான உணவுகளுக்குப் பழகுவதும்.

கருத்துரையிடுக Disqus

 
Top