ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்.
அதற்கு அரண்மனையிலிருந்து அவர்களுக்குத் தினமும் பால் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிய எல்லாரும தங்கள் பூனைகளைக் கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார்.
அனைவரின் பூனையும் கொழுகொழுவென்று இருந்தன. ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் இப்படி உள்ளது என்று மன்னர் கேட்டார்.
அதற்கு, என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் அருந்த மாட்டேன் என்கிறது என்று தெனாலி ராமன் சொன்னார்.
மன்னரால் நம்ப முடியவில்லை. எங்கே பால் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைக் கண்டதும் அந்தப் பூனை குதித்தோடியது.
என்ன நடந்தது, ஏன் பூனை இப்படி ஓடுகிறது என்று மன்னர் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது, தெனாலி ராமன் முதல் நாளிலேயே பாலை கொதிக்க வைத்து அதை அப்படியே பூனைக்கு வைத்திருக்கிறார்.
அதைக் குடிக்க முயன்றதும் பூனை சூடு தாங்க முடியாமல் ஓடிவிட்டது. அதுவே வழக்கமாகி விட்டது. பாலை தெனாலி ராமன் அருந்தி வந்துள்ளார்.
அண்மைக் காலமாக சந்திக்கும் நபர்கள் அவர்களின் அனுபவங்கள் எனக்கு இந்தக் கதையை நினைவுறுத்தியது.
சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டவர்களுக்கு சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் சமுதாயத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் ஆவார். அதோடு எந்தவித பொதுச் சேவையோ, அரசியல் அனுபவமோ இல்லாதவர்கள்.
இன்னும் சிலர் ஏற்கனவே சமுதாய, அரசியல் சேவைகளில் இருப்பவர்கள். இவர்கள் தங்களது அனுபவம், திறனுக்கேற்ப சமுதாயத்தில், அரசியலில் வெற்றிபெற்ற அல்லது தோல்விபெற்ற நிலையில் உள்ளவர்கள்.
சமுதாய, அரசியல் சேவைகளில் தோல்வி பெறுபவர்கள் தங்கள் இயலாமை, குறைபாடுகள் காரணமாக அந்த நிலையை அடைகின்றனர். இவர்கள் அந்தச் சேவைகளின் மூலமாக தங்கள் சொந்த அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதும் இதற்கு காரணமாகிறது.
எனவே புதிதாக சமுதாய, அரசியல் சேவையில் ஈடுபட நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையில் உள்ளவர்களின் உதவியை நாடினால் அதோ கதிதான்.
எனவே நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். தாங்கள் உதவிக்காக நாடும் நபர்களையும் நன்கு அறிந்துகொண்டு அவர்களிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தெனாலி ராமன் பூனை வளர்த்த கதையாகிவிடும்.
பின்னர் அவர்கள் சமுதாயமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus