நிலத்தடி நீர் சேமிப்புப் பணிகள்தான் ராலேகண்சித்தி கிராமத்தை இன்றைக்கு உலகறியச் செய்திருக்கின்றன. அந்தப் பணியொன்றும் அத்தனை எளிதாக அண்ணாவுக்குக் கைகூடி விடவில்லை. காரணம், அந்த நிலத்தின் இயற்கை அமைப்பு அப்படி. 15 முதல் 20 அடி ஆழம் வரைதான் மண் கண்டம். அதற்குக் கீழே கடினப் பாறை. கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் எல்லாம் அமைத்தார்கள். ஆனால், அதில் தேங்கிய நீர், சிமென்ட் தொட்டியில் உள்ள நீரைப் போல அப்படியே இருந்தது. பழையபடியே கிணறுகள் வறண்டுதான் கிடந்தன.
'என்ன காரணம்?' என்று ஆய்வில் இறங்கியபோதுதான், பாறைகள் தடுக்கின்றன என்ற விஷயத்தைக் கண்டறிந்தனர். உடனே கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் அமைத்த இடங்களின் அருகே 100 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகள் (போர்வெல்) அமைத்தனர். கிடைத்த மழைநீரையெல்லாம் ஆழ்துளை கிணற்றுக்குள் சென்று சேரும் வகையில் வழி செய்தனர். என்ன ஆச்சர்யம்... அடுத்தப் பருவத்தில் மழை பெய்தவுடன் பக்கத்தில் இருந்த கிணறுகளில் நீர்மட்டம் கூடியது. கசிவுநீர்க் குட்டைகளில் இருந்த நீரும் மெள்ள நிலத்துக்குள் இறங்கத் தொடங்கியது.
பிறகென்ன... தடையில்லாதப் பாசனத்தின் மூலம் விவசாயம் விரிவடைய ஆரம்பித்துவிட்டது.
கருத்துரையிடுக Facebook Disqus