0

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் விவரம் தெரிந்தவர்கள் கேட்கும் கேள்வி“குழந்தையின் எடை என்ன?” இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள உதவும். குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை குழந்தை மருத்துவ நிபுணரிடம் குழந்தையைக் காட்டி எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வோம். (மிகச்சிறந்த குழந்தை மருத்துவர் குழந்தையின் தலையின் அளவைக்கூட குறித்துக்கொள்வார்) பிறகு குழந்தை வளர வளர் உடல் நிலை ஏதும் சரியில்லை என்றால் தான் மருத்துவரிடம் செல்வோம் என்பதால் பல விடயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.


தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. (சாப்பிட வைப்பதே பெரும்பாடாக இருக்கும் பொழுது சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா?) ஆனால் கவலைப்பட வேண்டும். அப்போதுதான் நாம் நம் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்துக்கொள்ள முடியும். குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ ஆபத்தானது.

கொழுக் மொழுக்கென இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம் என்பது அபத்தம். உயரத்துக்கான எடை இருந்தாலே அவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தம்.

அதிக எடை:

அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள் சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, குறைவான உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான காரணங்கள். இதை தெரிந்து கொண்டு சரிசெய்தால் குழந்தைகளை சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

குறைவான எடை:

இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில் பாதிப்பைத் தரும். இன்னொரு வகை பிரச்சனையும் இருக்கிறது. குடும்ப வாகு, உடல்வாகு போன்ற காரணத்தால் சில குழந்தைகள் அதிக உயரம்(வயதுக்கு மீறிய உயரம்) இருப்பார்கள். இதனால் ஒல்லியாக தெரிவார்கள். 12 வயதுக்கு 147 செ.மீ இருக்க வேண்டிய பையன் 153இருந்தால் அதிக உயரம்.

(வயதுக்குத் தகுந்த எடை இருந்தாலும்) அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும் எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு உள்ளாவான். நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக் கண்காணித்து வரவேண்டும்.

உயரம்/எடை அளவு ஆண்குழந்தைக்கு வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு என்பதை நாம் மறக்கக்கூடாது. சரியாக கவனித்து முறையாக வளர நாம்தான் உதவ வேண்டும். ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம். அவர் நலன் காப்போம்



கருத்துரையிடுக Disqus

 
Top