0
Posted Image
தேர்தலில் முதல்முறையாக ஓட்டுப்போட்டதற்கு அடையாளமாக தன் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை மற்றவர்களிடம் பெருமையுடன் காட்டிக்கொள்வதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருப்பது உண்மை. அந்த அழியாத மையின் பின்னால் சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க அதாவது ஒருவரே பல ஓட்டுகளை போடுவதை தடுப்பதற்காக இந்த மை பயன்படுத்தப்படுகிறது.
இந்த மையை பயன்படுத்தி ஒருமுறை விரலில் அடையாளமிடும்போது பல மாதங்களுக்கு அது அழியாமல் நீடித்திருக்கிறது. தேர்தலின் போது ஓட்டுப்போட வரும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரல் நகத்தில் இந்த மை அடையாளமாக இடப்படுகிறது. தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல் சோதனைக்கூடம், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கர்நாடகத்தை சேர்ந்த மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் இந்த மையை தயாரித்து வழங்குகிறது. இந்த மையை வினியோகிக்கும் அதிகாரம் இந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது. புது டெல்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் இந்த உரிமத்தை 1962ம் ஆண்டு வழங்கியது.


இந்த நிறுவனம் 1937ம் ஆண்டு, அப்போதைய மைசூர் ராஜதானியின் மகாராஜாவாக இருந்த நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் மைசூர் அரக்கு மற்றும் பெயின்ட் பணி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1989ல் இந்த நிறுவனத்துக்கு தற்போதைய பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1962ல் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைபடி இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநில பொது தேர்தலுக்கான மையை வழங்கி வருகிறது. மையின் மூலமும் செயல்பாடும்: இந்த மையில் சில்வர் நைட்ரேட் அடங்கியுள்ளது. இந்த ரசாயனத்தில் புற ஊதா வெளிச்சம்படும்போது அது தோலில் கறையை ஏற்படுத்துகிறது. வெளித்தோலின் செல்கள் மாறும்போதுதான் இந்த கறை நீங்குகிறது.

விரல் மாறுபாடு: 1.2.2006ம் தேதியிலிருந்து இந்த மை இடது ஆள்காட்டி விரலில், நகத்தின் உச்சியிலிருந்து முதல் தோலுடன் இணையும் அடிவரை கோடுபோல் போடப்படுகிறது. அதற்கு முன் இந்த மை நகமும் தோலும் சேருமிடத்தில் இடப்பட்டது. இரு முறை வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, இந்த மை வாக்காளரின் இடது கை நடு விரலில் போடப்படுகிறது.


2009ல் நடைபெற்ற பொது தேர்தலுக்கு மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம் 10 மில்லி அளவிலான சுமார் 20 லட்சம் குப்பிகளை வழங்கியது. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும் 2.88 லட்சம் குப்பிகள் பயன்படுத்தப்பட்டன.

கருத்துரையிடுக Disqus

 
Top