மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பிற்கு நாளுக்கு நாள் மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு ஏற்றால் போல் கல்லூரிகளும் மாணவ, மாணவிகளை கவர பல்வேறு சலுகைகளை காட்டி வருகின்றன. இதில், மாணவர்களுக்கு எந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்கலாம். மேலும், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் இருக்கும். ஆனால், இம்முறை மாணவர்களுக்கு அந்த சந்தேகம் தேவையற்றது என்று சொல்லலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் இந்த ஆண்டு நிரப்படவுள்ளது. இதில், தற்போது வரை 2 லட்சம் பேர் தான் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால், அனைவருக்கும் பொறியியல் பிரிவில் படிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்கள் பொறியியல் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டவுடன் எந்த பிரிவை எடுத்து படிக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். சிவில், மெக்கானிக், கம்ப்யூட்டர், எலட்ரிக்கல், எலட்ரானிக், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன், ஐ.டி இன்ஜினியரிங் மரைன், ஏரோ நாட்டிக் என்று பல பிரிவுகள் உள்ளன. இதில், எந்த பிரிவை படித்தால் சாதிக்க முடியும், எந்த பிரிவுக்கு எதிர்காலத்தில் அதிகளவில் மவுசு உள்ளது என்பது குறித்து நன்றாக ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் எந்த படிப்பை எளிதாக படிக்க முடியும் என்ற திட்டத்தை தீட்டி படித்தால் எளிதாக சாதனை படைக்கலாம்.
பெற்றோர் விரும்பும் படிப்பை எடுத்தால் சாதிக்க முடியும் என முழு நம்பிக்கை இருந்தால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பெற்றோர் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் இடம் கிடைக்கும். இங்கு படித்தால் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும். அரசு சலுகைகள் மற்றும் கட்டணம் குறைவு.
கட்ஆப் மதிப்பெண் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பிற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகம் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் போது கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் கல்லூரியின் கல்வித்தரம், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை ஆராய்ந்து சிறந்த கல்லூரியை தேர்வு செய்யலாம்.
கவுன்சலிங்கிற்கு முன்பு உங்களுக்கு பிடித்த பாடங்கள் எந்த கல்லூரியில் உள்ளது என்பதை பட்டியல் போட்டு வைத்துக்கொள்ளவும். இதன்மூலம், கவுன்சலிங் அறைக்குள் சென்றதும் எந்த கல்லூரி, எந்த பாடப்பிரிவு என்பதை எளிதில் தேர்வு செய்ய முடியும். அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் சிறந்த கல்லூரியை தேர்வு செய்து நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus