0
Posted Image

கடை கடையாக ஏறி இறங்கிப் பொருட்கள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இருந்த இடத்திலேயே அன்றாட வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியும் என்பதை இப்போது இணையம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு, அசோச்சம் நடத்திய ஆய்வு இதை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவின் மின் வர்த்தகம் 88 சதவீதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அது மட்டுமில்லாமல், இந்தியாவில் 15 கோடிப் பேருக்கு இணையத்தைப் பயன்படுத்தும் வசதியிருக்கிறது என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. ஆண்களில் 65 சதவீதமும், பெண்களில் 35 சதவீதமும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பெருகிவரும் இணையப் பயன்பாடும், காலத்திற்கேற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளத் தயராக இருப்பதும் ஆன்லைன் ஷாப்பிங்கின் வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. நகர்ப்புற மக்கள் பெரிய அளவில் ஆன்லைன் ஷாப்பிங் நோக்கி நகர்வதற்குப் பல்வேறு அம்சங்களைக் கூறலாம்.


எளிமையான விற்பனை முறை


ஆன்லைன் ஷாப்பிங்கில் இருக்கும் பல விதமான வசதிகள் இளைஞர்களை மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்திருக்கின்றன. கடைக்குச் செல்லும் நேரத்தை மிச்சப்படுத்துவது, எப்போதும் கிடைக்கும் தள்ளுபடி, பல இணையதளங்களில் வாங்கும் விலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது, பரிசாக அனுப்பும் வசதி போன்றவை ஆன்லைன் ஷாப்பிங்கின் சிறப்பம்சங்கள்.

“பொருட்கள் தேர்வில் இருந்து, விலையைத் தீர்மானிப்பது வரை பலவிதமான வாய்ப்புகளை ஆன்லைன் ஷாப்பிங் அளிக்கிறது. தில்லியில் மட்டுமே கிடைக்கும் ஒரு புத்தகத்தை இரண்டே நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வீட்டிற்கே வரவழைக்க முடிகிறது. தள்ளுபடி விலையையும் பல தளங்களில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கிக் கொள்ள முடிகிறது”


நேர நிர்வாகம்

ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்ந்தெடுக்கும் பலரும் சொல்லும் காரணம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதுதான். “கடைக்குச் சென்றுதான் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற நிலைமையை ஆன்லைன் ஷாப்பிங் மாற்றியிருக்கிறது. எனக்குத் தேவையான மின்சாதனங்களைக் கூட ஆன்லைன் ஸ்டோர்களிலே வாங்கிக்கொள்ள முடிகிறது” . மொபைல், ஹார்ட் டிஸ்க், ஆடைகள் போன்றவற்றை கூட ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க முடிகிறது

“ஆன்லைன் ஸ்டோர்களுக்கான இணையதளங்கள் அளிக்கும் பல விதமான தேர்வுகள் ஆன்லைன் ஷாப்பிங்கை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்கில் புத்தகங்களை வாங்குவது நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. ஆனால் அதே சமயம் பொருட்களை மாற்றுவதற்கான வழிகளை இன்னும் எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்கிறனர் பயனாளர்கள் .


தொழில் வாய்ப்புகள்

ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொருட்கள் வாங்க மட்டும் பயன்படுத்தாமல் அதையே வேலை வாய்ப்பாகவும் மாற்றியிருக்கிறார்கள் சிலர் . ‘தம்ஸ்ட்ரக் கலக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்து, வெற்றிகரமாக ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்கி வருகிறார். டி ஷர்ட்கள், காப்பி கோப்பைகள், புகைப்பட ப்ரேம்கள் போன்ற இளைஞர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்கள்

“எடுத்த உடனேயே ஆன்லைன் ஸ்டோரை ஆரம்பிக்க பெரிய முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதை நிர்வகிக்க ஒரு பெரிய அளவிலான மனித ஆற்றலும் தேவை. ஆனால் குறைந்த விற்பனை முதலீட்டில் இந்த ஆன்லைன் ஷாப்பிங் சேவையை ஆரம்பிக்க ஃபேஸ்புக் சிறந்த வழியாக இருந்தது. அதோடு பேஸ்புக்கின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். அதனால் விற்பனையைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. 40 சதவீத ஆர்டர்கள் எங்களுக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தே கிடைக்கின்றன” என்கிறார் ஒரு நண்பர் .



ஷாப்பிங்கிற்கு நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக ஆன்லைன் ஷாப்பிங் அமைந்திருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது. ஆன்லைனிலேயே பணம் செலுத்துதல், டெலிவரி செய்யும்போது பெற்றுக்கொள்ளுதல், எப்போதும் தள்ளுபடி, ஆகிய அம்சங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை இளைஞர்கள் லைக் செய்ய முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங்குக்கான விளம்பரங்களும் இணைப்புகளும் சுண்டி இழுப்பதால் இளைஞர்கள் இதில் ஈர்க்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 

கருத்துரையிடுக Disqus

 
Top